பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகார் ஜமானும் இமாம் உல் ஹக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இமாம் உல் ஹக் 31 ரன்களில் அவுட்டாக, சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஃபகார் ஜமான், 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பாபர் அசாமும் ஹாரிஸ் சொஹைலும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர். 

இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 111 ரன்களை சேர்த்தனர். ஹாரிஸ் சொஹைல் 40 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக ஆடிய பாபர் அசாம் சதமடித்து அசத்தினார். இதற்கிடையே கேப்டன் சர்ஃபராஸ் அகமது வழக்கம்போலவே 8 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இஃப்டிகார் அகமது தன் பங்கிற்கு 32 ரன்கள் சேர்த்தார். சதமடித்த பாபர் அசாம் 115 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணி. 

306 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் சமரவிக்ரமா 6 ரன்களிலும் குணதிலகா 14 ரன்களிலும் நடையை கட்டினர். சமரவிக்ரமாவின் விக்கெட்டை வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் உஸ்மான் ஷின்வாரி, இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவை ரன்னே அடிக்கவிடாமல் வீழ்த்தினார். கேப்டன் திரிமன்னேவையும் ரன்னே அடிக்கவிடாமல் ஷின்வாரி வீழ்த்தினார். ஒஷாடா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னில் நடையை கட்டினார். 

இலங்கை வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழக்க, 28 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. அதன்பின்னர் ஷெஹான் ஜெயசூரியாவும் ஷனாகாவும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடி, பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியையும் பயத்தையும் ஏற்படுத்தினர். எனினும் இலங்கை அணிக்கு அதிகமான ரன்ரேட் தேவையிருந்ததால் வெற்றி நம்பிக்கையில் இருந்தது பாகிஸ்தான் அணி. 

ஆனாலும் ஜெயசூரியாவும் ஷனாகாவும் அபாரமாக ஆடினர். இருவருமே அரைசதம் கடந்தனர். இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 177 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடிக்கொண்டிருந்த ஜெயசூரியா 96 ரன்களில் ஷின்வாரியின் பந்தில் ஆட்டமிழந்து 4 ரன்களில் சதத்தை தவறவிட்டதோடு, அவரது அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். ஷனாகாவும் 68 ரன்களில் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழக்க, 238 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த உஸ்மான் ஷின்வாரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.