தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-1 என டி20 தொடரை வென்றது.
தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று நடந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக ஆடவில்லை. பின்வரிசையில் இறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி 45 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 85 ரன்களை விளாசினார். அவரது அதிரடியால் 20 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 164 ரன்கள் அடித்தது.
165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடினர். ரிஸ்வான் 42 ரன்களும் பாபர் அசாம் 44 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தாலும், இலக்கு கடினமானது இல்லை என்பதால் நவாஸும் ஹசன் அலியும் இணைந்து 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-1 என டி20 தொடரை வென்றது.
