பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நேப்பியரில் நடந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷதாப் கான், நியூசிலாந்தை முதலில் பேட்டிங் ஆட பணிக்க, நியூசி., தொடக்க வீரர் மார்டின் கப்டில் இந்த போட்டியிலும் சொதப்பி 19 ரன்களுக்கே நடையை கட்டினார். கேப்டன் வில்லியம்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய டிம் சேஃபெர்ட், 20 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து அவுட்டானார். டிம் சேஃபெர்ட்டின் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து அதிரடியை தொடர்ந்த க்ளென் ஃபிலிப்ஸ், 20 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த கான்வாய் 63 ரன்களில் ஆட்டமிழக்க, அவரது பொறுப்பான பேட்டிங்கால் நியூசி., அணி 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது.

174 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹைதர் அலி 11 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் முகமது ஹஃபீஸ், இந்த போட்டியிலும் பொறுப்பாக ஆடினார். 29 பந்தில் 41 ரன்கள் அடித்து ஹஃபீஸ் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து குஷ்தில் ஷா, ஃபஹீம் அஷ்ரஃப், ஷதாப் கான், ஆகியோர் முறையே 13, 2  மற்றும் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து கடைசி வரை போட்டியை எடுத்துச்சென்ற தொடக்க வீரர் முகமது ரிஸ்வான், கடைசி ஓவரின் 2வது பந்தில் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தாலும், கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றுவிட்டார் என்பதால், இஃப்டிகார் அகமது வின்னிங் ஷாட்டை அடித்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க, தொடரை இழந்தாலும், 4 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி டி20யில் ஆறுதல் வெற்றியை பெற்றது பாகிஸ்தான் அணி.