பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் மற்றும் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஆகிய இருவரும் சதமடித்தனர். இவர்களின் பொறுப்பான சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. ஷான் மசூத் 100 ரன்களையும் பாபர் அசாம் 143 ரன்களையும் குவித்தனர்.

212 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி வீரர்கள், இரண்டாவது இன்னிங்ஸிலும் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். இன்னிங்ஸின் 41வது ஓவரில் நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வங்கதேச பேட்டிங் ஆர்டரை சரித்தார். அந்த ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, அடுத்த 44 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸில் 168 ரன்களுக்கே வங்கதேசம் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

அண்டர் 19 வங்கதேச அணி, முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்ற நிலையில், வங்கதேச சீனியர் அணி, டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்துள்ளது.