ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 148 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி.
முதல் டெஸ்ட் டிரா:
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ராவல்பிண்டி ஆடுகளம் படுமோசமாக இருந்ததால் பவுலிங்கிற்கு கொஞ்சம் கூட ஒத்துழைப்பே இல்லை. முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சாக இருந்தது. பிட்ச்சில் ஒன்றுமே இல்லாததால் சுவாரஸ்யமே இல்லாமல் நடந்து முடிந்தது முதல் டெஸ்ட்.
கராச்சி டெஸ்ட்:
கராச்சியில் நடந்துவரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ஆடியதை பார்க்கையில், கராச்சி பிட்ச்சும் அப்படித்தான் தெரிந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 2 நாள் முழுக்க பேட்டிங் ஆடி, 3ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தான் டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். கவாஜா 160 ரன்களையும், ஸ்மித் 72 ரன்களையும், அலெக்ஸ் கேரி 93 ரன்களையும் குவித்தனர். மற்ற வீரர்களும் பங்களிப்பு செய்ய 556 ரன்களை குவித்து 3ம் நாள் ஆட்டமான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.
சரணடைந்த பாகிஸ்தான்:
பாகிஸ்தான் அணியும் பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலிய பவுலர்களிடம் மண்டியிட்டு சரணடைந்தனர். தொடக்கத்திலிருந்தே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 36 ரன்கள் அடித்தார். 118 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், நௌமன் அலியும் ஷாஹீன் அஃப்ரிடியும் இணைந்து நன்றாக ஆடி கடைசி விக்கெட்டுக்கு 30 ரன்களை சேர்த்தனர். அதனால் தான் பாகிஸ்தான் அணி 148 ரன்களையாவது பாகிஸ்தான் அடித்தது.
408 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது ஆஸ்திரேலிய அணி. பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் வழங்கியிருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் 2வது இன்னிங்ஸை ஆடுகிறது ஆஸ்திரேலிய அணி.
