ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி சிஎஸ்கே. ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்துள்ள நிலையில், 2016, 2017ம் ஆண்டுகளை தவிர மற்ற 10 சீசன்களில் ஆடியுள்ள சிஎஸ்கே, அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றதுடன், 8 முறை இறுதி போட்டிகளில் ஆடி, அதில் 3 முறை வென்று கோப்பையை கைப்பற்றியது. 

2010, 2011, 2018 ஆகிய 3 சீசன்களிலும் சிஎஸ்கே அணி, ஐபிஎல் டைட்டிலை வென்றது. இதில் 2011ல் இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற தினம் இன்று. 

2011ல் ஐபிஎல்லின் நான்காவது சீசன் நடந்தது. நான்காவது சீசனில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய சிஎஸ்கே அணி, இறுதி போட்டியில் ஆர்சிபி அணியை இதே மே 28ம் தேதி எதிர்கொண்டது. 

2011 மே 28ம் தேதி சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணிக்கு தமிழகத்தை சேர்ந்த முரளி விஜயும் மைக் ஹசியும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 159 ரன்களை குவித்து கொடுத்தனர். மைக் ஹசி 63 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக ஆடிய முரளி விஜய், சதத்தை நெருங்கினார். ஆனால் சதமடிக்க வாய்ப்பிருந்தும், 95 ரன்களில் ஆட்டமிழந்தார். 52 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 95 ரன்களை குவித்து 19வது ஓவரின் முதல் பந்தில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். முரளி விஜயின் அதிரடியான பேட்டிங்கால் சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 205 ரன்களை குவித்தது. 

206 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய ஆர்சிபி அணியில், தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவருமே சொதப்பினர். கெய்ல் டக் அவுட்டாக, மயன்க் அகர்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டிவில்லியர்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, லூக் பொமெர்ஸ்பேக் 2 ரன்னில் ஆட்டமிழக்க, ஒருமுனையில் நிலைத்து நின்ற விராட் கோலியும் 35 ரன்களில் நடையை கட்டினார். ஆர்சிபி இன்னிங்ஸின் பாதியிலேயே சிஎஸ்கேவின் வெற்றி உறுதியானது. சவுரப் திவாரி மட்டும் 42 ரன்கள் அடித்தார். ஆர்சிபி அணி 20 ஓவரில் வெறும் 147 ரன்கள் மட்டுமே அடிக்க, சிஎஸ்கே அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஐபிஎல் டைட்டிலை வென்றது. 

இந்த வெற்றிக்கு காரணம் முரளி விஜயின் அதிரடியான பேட்டிங் தான். இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக இறங்கி, தொடக்கம் முதலே ஆர்சிபி மீது ஆதிக்கம் செலுத்தி அதிரடியாக ஆடி ஆர்சிபியை மனதளவில் வீழ்த்தியதுடன், 95 ரன்களை குவித்து, ஃபைனலில் சிஎஸ்கே 205 ரன்களை குவிக்க காரணமாக திகழ்ந்தார்.