நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரின் அபார சதத்தால் பெரிய ஸ்கோரை நோக்கி இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி டேரைல் மிட்செல் மற்றும் டாம் பிளண்டெலின் அபாரமான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது.

டேரைல் மிட்செல் 190 ரன்களையும், டாம் பிளண்டெல் 106 ரன்களையும் குவித்ததன் விளைவாக முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 553 ரன்களை குவித்தது. 2ம் நாள் ஆட்டத்தின் 3வது செசனில் தான் முதல் இன்னிங்ஸை முடித்தது நியூசிலாந்து அணி.

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி 2வது ஓவரில் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் லீஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

147 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடிவருகின்றனர். ஆலி போப் சதமடிக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜோ ரூட்டும் சதமடித்தார்.

போப் மற்றும் ரூட் ஆகிய இருவரும் களத்தில் நன்றாக செட்டில் ஆகி சதமடித்துள்ள நிலையில், 3ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக் வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்களை குவித்துள்ளது. போப் 142 ரன்களுடனும், ரூட் 109 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவருமே செட்டில் ஆகி சதமடித்திருப்பதால், இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோர் அடிப்பது உறுதி. 553 ரன்களை குவித்த நியூசிலாந்து அணிக்கு, தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக இங்கிலாந்து அணி அபாரமாக ஆடிவருகிறது.