2011 உலக கோப்பை இறுதி போட்டி மும்பையில் நடந்தது. அந்த இறுதி போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியும், சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணியும் மோதின. இறுதி போட்டியில் இலங்கை 275 ரன்கள் என்ற இலக்கை 49வது ஓவரில் எட்டி இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை வென்றது. 

இந்நிலையில், 9 ஆண்டுகள் கழித்து, அந்த இறுதி போட்டியில் இலங்கை தான் வெற்றி பெற்றிருக்க வேண்டியது என்றும், ஆனால் ஃபிக்ஸிங் செய்யப்பட்டதால் தான் இந்தியா வென்றது என்றும் இலங்கையின் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். 

முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டையடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சகம் காவல்துறையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரித்தது. அதன்படி விசாரணை அதிகாரிகள், 2011 உலக கோப்பையின்போது தலைமை தேர்வாளராக இருந்த அரவிந்த் டி சில்வாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. உபுல் தரங்காவிடம் 2 மணி நேரமும், 2011 உலக கோப்பையில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த சங்கக்கராவிடம் 10 மணி நேரமும் அதைத்தொடர்ந்து ஜெயவர்தனேவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 

விசாரணையின் முடிவில், உலக கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் நடந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று விசாரணையை கைவிட்டது சிறப்பு விசாரணை குழு. ”அணி தேர்வு மற்றும் இறுதிப்போட்டியில் வீரர்கள் மாற்றங்கள் குறித்து 2 வீரர்களிடமும், தேர்வு குழு தலைவரிடமும் விசாரணை நடத்தினோம். அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கிறது. அவர்கள் தவறு செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இத்துடன் வழக்கு விசாரணையை முடித்து விட்டோம். வீரர்களிடம் மேலும் விசாரணை நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. எல்லா வீரர்களுக்கும் சம்மன் அனுப்பி வாக்குமூலத்தை பெறுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். எங்களது விசாரணை அறிக்கையை இலங்கை விளையாட்டுத்துறை செயலாளருக்கு அனுப்பி வைப்போம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.