உலக கோப்பை இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்த உலக கோப்பை தொடர் முழுவதுமே முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாகத்தான் முடிவுகள் வந்துள்ளன. இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் பெரும்பாலும் தோற்றுத்தான் போயுள்ளன. இங்கிலாந்து ஆடுகளங்களின் கண்டிஷன்கள் அந்த மாதிரி உள்ளன.

அதிலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த உலக கோப்பையில் நடந்த 4 லீக் போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் வென்றுள்ளன. அதுவும் அடுத்தடுத்த போட்டிகளில் பெரிய வெற்றிகள் பெறப்பட்டுள்ளன. 

இந்த உலக கோப்பையில் லண்டன் லார்ட்ஸில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதற்கடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடந்த போட்டியில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வென்றது. அதற்கடுத்த போட்டியில் நியூசிலாந்தை 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. கடைசியாக லார்ட்ஸில் நடந்த போட்டியில் வங்கதேசத்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. 

இப்படியாக இதுவரை இந்த உலக கோப்பையில் லார்ட்ஸில் நடந்த 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளது. எனவே இறுதி போட்டியில் மிகவும் முக்கியமான டாஸை வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கையே தேர்வு செய்தார். 

லீக் சுற்றில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இலக்கை வெற்றிகரமாக விரட்டமுடியாமல் இங்கிலாந்து அணி தோற்ற நிலையில், இறுதி போட்டியிலும் சேஸிங் செய்யும் நிலை உருவானது. ஏற்கனவே சேஸிங்கில் திணறிவரும் நிலையில், லார்ட்ஸில் நடந்த அனைத்து போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்த அணிதான் வென்றுள்ளது என்பதால் இறுதி போட்டியில் சேஸிங் செய்ய நேரிட்டதால் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனின் முகம் சுண்டியது. 

அதனால் டாஸ் போட்ட பின்னர் பேசும்போது அவரது முகம் செழிப்பாக இல்லை. ஒரு பீதி தெரிந்தது. எனினும் அதிக அழுத்தம் கொண்ட இறுதி போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் ஆடிய அதே வீரர்களுடன் தான் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. 

நியூசிலாந்து அணியின் பவுலிங் வேற அபாரமாக உள்ளது. எனவே 270 ரன்கள் அடித்தால் இங்கிலாந்தை இந்த ஆடுகளத்தில் சுருட்டிவிடக்கூடிய அளவிற்கு நியூசிலாந்து அணியிடம் வலுவான பவுலிங் யூனிட் உள்ளது. 

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், நிகோல்ஸ், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லேதம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட் ஹோம், சாண்ட்னெர், ஹென்ரி, ஃபெர்குசன், ட்ரெண்ட் போல்ட். 

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.