உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் அபாரமான சதத்தால் 291 ரன்களை குவித்தது. 292 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராத்வெயிட் தனி ஒருவனாக சதமடித்து கடைசிவரை போராடினார். ஆனாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால் நெருக்கடியில் இருந்த ப்ராத்வெயிட், கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் அணி வீரர்களுக்கு 10 சதவிகிதம் அபராதமும் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு 20 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடரில் மீண்டும் மற்றொரு போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கேப்டன் வில்லியம்சன் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளது.