Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ பவுலிங்கில் சொதப்பினாலும் பேட்டிங்கில் போட்டியின் முடிவையே மாற்றிய நியூசிலாந்து ஸ்பின்னர்கள்..!

நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர்கள் பவுலிங்கில் சொதப்பினாலும், பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு நியூசிலாந்தை தோல்வியிலிருந்து காப்பாற்றி, இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டை டிரா செய்ய உதவினர்.
 

new zealand spinners shine in batting instead of bowling in first test against india
Author
Kanpur, First Published Nov 29, 2021, 5:38 PM IST

இந்தியா  - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியை போலவே 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணியின் பலம் ஸ்பின் பவுலிங் இல்லை என்றாலும், கண்டிஷனை கருத்தில்கொண்டு சோமர்வில், அஜாஸ் படேல் மற்றும் ராச்சின் ரவீந்திரா ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் ஆடியது நியூசிலாந்து அணி.

ஆனால் நியூசிலாந்து ஸ்பின்னர்கள் அவர்கள் மீது இருந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பந்துவீசவில்லை. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் சதம் (105), ஷுப்மன் கில் (52) மற்றும் ஜடேஜாவின் அரைசதத்தின் (50) உதவியுடன் 345 ரன்களை குவித்தது இந்திய அணி. நியூசிலாந்து அணி சார்பில் ஃபாஸ்ட் பவுலர்கள் சௌதி 5 விக்கெட்டுகளையும், ஜாமிசன் 3 விக்கெட்டுகளையும் என மொத்தம் 8 விக்கெட்டுகளை ஃபாஸ்ட் பவுலர்களே வீழ்த்தினர். ஸ்பின்னர் அஜாஸ் படேல் வெறும் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினர். சோமர்வில் மற்றும் ராச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

ஆனால் இந்திய அணியில் அதற்கு நேர்மாறாக ஸ்பின்னர்களே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் ஸ்பின்னர்களே 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் என மொத்தம் 9 விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் வீழ்த்த, உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்ஸிலும் நியூசிலாந்து அணியில் ஃபாஸ்ட் பவுலர்களே சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினர். டிம் சௌதி மற்றும் ஜாமிசன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஜாஸ் படேல் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 ஸ்பின்னர்களுடன் ஆடிய நிலையில், 2 இன்னிங்ஸிலும் சேர்த்தே நியூசி., ஸ்பின்னர்கள் மொத்தமாக 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தினர். அந்த 3 விக்கெட்டுமே அஜாஸ் படேல் வீழ்த்தியது. சோமர்வில் மற்றும் ராச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இந்திய ஆடுகளத்தை நம்பி, நியூசிலாந்து அணியில் எடுக்கப்பட்ட தங்களால் பவுலிங்கில் அணிக்காக எந்த பங்களிப்பையும் செய்ய முடியாத விரக்தியில் இருந்த அவர்கள், பேட்டிங்கில் அருமையாக செயல்பட்டு போட்டியின் முடிவையே மாற்றிவிட்டனர். 284 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங், 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஆட்டமிழக்க, நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்டார் சோமர்வில். 

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் நைட் வாட்ச்மேனான சோமர்வில்லை விரைவில் வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் சோமர்வில். அஷ்வின், அக்ஸர் படேல், ஜடேஜா ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களையும் திறம்பட எதிர்கொண்ட சோமர்வில், நேரத்தையும் பந்துகளையும் கடத்தி, இந்திய அணிக்கு சவாலாக திகழ்ந்தார். 110 பந்துகள் பேட்டிங் ஆடி 36 ரன்கள் அடித்த சோமர்வில் உமேஷின் பந்தில் ஆட்டமிழந்தார். சோமர்வில் 36 ரன்னில் ஆட்டமிழந்திருந்தாலும், யாருமே எதிர்பார்த்திராத வகையில் 110 பந்துகள் பேட்டிங் ஆடி இந்திய அணியை கடினமான நிலைக்கு தள்ளினார்.

அதன்பின்னர் டாம் லேதமும் ஆட்டமிழக்க, ரெய்லர், நிகோல்ஸ், வில்லியம்சன், டாம் பிளண்டெல், ஜாமிசன், டிம் சௌதி என அனைத்து வீரர்களும் ஆட்டமிழக்க, 89.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி. 8ம் வரிசையில் களத்திற்கு வந்த ராச்சின் ரவீந்திரா, ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் ஜாமிசன், சௌதி ஆகியோர் ஆட்டமிழந்தனர். 90வது ஓவரில் 9 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் 8.4 ஓவர்கள் எஞ்சியிருந்ததால் கடைசி விக்கெட்டை இந்திய அணி வீழ்த்திவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 70வது ஓவரில் களத்திற்கு வந்த ராச்சின் ரவீந்திரா, களத்தில் நங்கூரம் போட்டு கடைசி வரை ஆடினார். கடைசி விக்கெட்டுக்கு ராச்சின் ரவீந்திராவுடன் ஜோடிசேர்ந்த அஜாஸ் படேலும் பொறுப்புடன் கவனமாக பேட்டிங் ஆடினார். அஷ்வின், அக்ஸர் படேல், ஜடேஜா ஆகிய மூவரும் எவ்வளவோ முயற்சி செய்தும், அவர்களை வீழ்த்தமுடியவில்லை.

ராச்சின் ரவீந்திரா 91 பந்துகளும், அஜாஸ் படேல் 23 பந்துகளும் பேட்டிங் ஆடி நியூசிலாந்து அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றி போட்டியை டிரா செய்தனர். இந்த போட்டியில் 3 ஸ்பின்னர்களுடன் ஆடிய நியூசிலாந்து அணிக்கு, அவர்கள் பவுலிங்கில் எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்றாலும், தங்களது தேர்வை நியாயப்படுத்தும் வகையில் பேட்டிங் அபாரமாக ஆடி போட்டியின் முடிவையே தீர்மானித்தனர். சோமர்வில், ராச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் படேல் ஆகிய மூவரும் இணைந்து மொத்தமாக 234 பந்துகள் பேட்டிங் ஆடினார். இவர்கள் மூவர் மட்டுமே மொத்தம் 39 ஓவர்கள் பேட்டிங் ஆடியுள்ளனர். அதுதான் போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது. குறிப்பாக கடைசி விக்கெட்டுக்கு ரவீந்திராவும் அஜாஸ் படேலும் ஆடிய விதம் அபாரமானது.

ஷ்ரேயாஸ் ஐயரின் சதம், சௌதி மற்றும் அக்ஸர் படேலின் 5 விக்கெட் ஹால் என அபாரமான பெர்ஃபாமன்ஸ்களை கடைசி 2 மணி நேரத்தில் நீர்த்து போகச்செய்தார் ராச்சின் ரவீந்திரா. இந்திய வம்சாவழியை சேர்ந்த ரவீந்திராவும் அஜாஸ் படேலும் சேர்ந்து இந்தியாவின் வெற்றியை தடுத்து, போட்டியை டிரா செய்துவிட்டனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios