இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டிலும் காலின் முன்ரோவும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோரின் பவுலிங்கை எந்த பேதமுமின்றி இருவரும் அடித்து துவம்சம் செய்தனர்.

பவர்ப்ளேயில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். குறிப்பாக ஷர்துல் தாகூரின் ஓவரை டார்கெட் செய்து அடித்து ஸ்கோர் செய்தனர். பவர்ப்ளே(6 ஓவர்) முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் அடித்திருந்தது. பும்ரா, ஷமி, தாகூர், சாஹல் ஆகியோரின் பவுலிங்கை அடித்து ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை பார்ட் டைம் பவுலரான ஷிவம் துபே பிரித்தார். 19 பந்தில் 30 ரன்கள் அடித்த கப்டிலை துபே வீழ்த்தினார். 

இதையடுத்து காலின் முன்ரோவுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய முன்ரோ அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அவர், அதன்பின்னர் நிலைக்கவில்லை. முன்ரோவை 59 ரன்களில் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். களத்திற்கு வந்ததும் ஒரு சில பந்துகளை மட்டுமே நிதானமாக எதிர்கொண்ட வில்லியம்சன், அதன்பின்னர் அடித்து நொறுக்கினார். 

தாகூர் வீசிய 12வது ஓவரின் 2 மற்றும் 3வது பந்துகளை சிக்ஸருக்கு விளாசிய வில்லியம்சன், நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்தார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில்தான் முன்ரோ ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த காலின் டி கிராண்ட் ஹோம் ரன்னே அடிக்காமல் ஜடேஜாவின் பந்தில் அவுட்டானார். 

இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து மிடில் ஓவர்களை வெளுத்துவாங்கிவிட்டனர். துபே வீசிய 14வது ஓவரில் வில்லியம்சன் ஒரு சிக்ஸர் அடித்தார். ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் டெய்லர், ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் அடித்தார். ஷமி வீசிய 16வது ஓவரில்தான் டெய்லர் வாணவேடிக்கை நிகழ்த்தினார். 

ஷமி வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த வில்லியம்சன், இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். இதையடுத்து பேட்டிங் முனைக்கு வந்த டெய்லர், அடுத்த 3 பந்தில் ஒரு பவுண்டரியும் 2 சிக்ஸரும் அடுத்தடுத்து விளாசினார். கடைசி பந்தில் சிங்கிள் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள், 2 சிங்கிள்கள் என மொத்தமாக 22 ரன்கள் அடிக்கப்பட்டது. 

சாஹல் வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்த வில்லியம்சன், அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 26 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 51 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 17 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 178 ரன்களை குவித்திருந்தது. 

ஆனால் அடுத்த இரண்டு ஓவர்களில் இந்திய பவுலர்கள் ரன்னை கட்டுப்படுத்தினர். 18வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து டிம் சேஃபெர்ட்டின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 19வது ஓவரை வீசிய ஷமி, அந்த ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரில் மொத்தம் 12 ரன்கள் அடிக்கப்பட்டது. அந்த ஓவரில் தனது அரைசதத்தை கடந்தார் டெய்லர். கப்டில், முன்ரோ, வில்லியம்சன், டெய்லரின் அதிரடியால் அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. அந்த அணி போன வேகத்திற்கு 220 ரன்கள் அடித்திருக்கலாம். 

எனவே இந்திய அணியின் பார்வையில் 15-20 ரன்கள் குறைவுதான். ஆனால் இதுவும் சவாலான இலக்குதான். ரோஹித் - ராகுல் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியம்.