இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 24ம் தேதி ஆக்லாந்தில் நடந்த முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 204 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 19வது ஓவரிலேயே அடித்து அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வென்று வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்திய அணியும், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் இறங்குவதால் இந்த போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும். 

இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. ஷர்துல் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி இந்திய அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நியூசிலாந்து அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே 11 வீரர்களுடன் தான் நியூசிலாந்து அணி களமிறங்கும். 

ஏனெனில் அந்த அணியில் மாற்றம் செய்ய வேண்டியதற்கான அவசியமில்லை. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாகவே பேட்டிங் ஆடியது. அந்த அணி போன வேகத்திற்கு 220-230 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான பும்ரா அருமையாக வீசி கடைசி ஓவர்களில் ரன்னை கட்டுப்படுத்தியதால், 15-20 ரன்கள் நியூசிலாந்துக்கு குறைந்ததே தவிர, நியூசிலாந்து அணியின் பேட்டிங் நன்றாகவே இருந்தது. அதேபோல பவுலிங்கிலும் குறை சொல்லும்படியாக எதுவுமில்லை. அந்த அணியால் 204 ரன்கள் என்ற கடின இலக்கையே தடுக்க முடியவில்லையே என்று தோன்றலாம். 

ஆனால் ஆக்லாந்து போன்ற மிகச்சிறிய மைதானத்தில், ரோஹித், ராகுல், கோலி, ஷ்ரேயாஸ் என வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி வெற்றி பெறுவது எளிதான காரியமல்ல. எனவே பவுலிங்கையும் குறை சொல்ல முடியாது. அதனால் இரண்டாவது போட்டியில் களமிறங்கும் அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் இன்றும் களமிறங்கும். 

2வது டி20 போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, ஹாமிஷ் பென்னெட், ப்ளைர் டிக்னெர்.