Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ வில் யங், டாம் லேதம் இருவருமே அரைசதம்..! நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடி அபார பேட்டிங்

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் அடித்துள்ளது.
 

new zealand openers will young and tom latham score fifty against india in first test
Author
Kanpur, First Published Nov 26, 2021, 5:18 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆடாததால், அஜிங்க்யா ரஹானே அணியை வழிநடத்துகிறார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 52 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து புஜாரா 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அருமையாக தொடங்கிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை ஷ்ரேயாஸ் ஐயரும் ஜடேஜாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். முதல் நாள் ஆட்டம் முடியும் வரை அவர்கள் விக்கெட்டை விட்டுக்கொடுக்கவில்லை. முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்திருந்தது. அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் முதல் நாள் ஆட்ட முடிவில் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை அவர்கள் இருவரும் தொடர்ந்தனர்.

இன்றைய ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஜடேஜாவை தொந்தரவு செய்த டிம் சௌதி, இன்று ஜடேஜாவை ரன்னே அடிக்கவிடாமல் அவுட்டாக்கினார். ஆனால் ஜாமிசனின் பவுலிங்கில் பவுண்டரிகளாக விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட்டில் அவரது முதல் சதத்தை அடித்தார். ரிதிமான் சஹா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்னில் ஆட்டமிழந்தார்.  அதன்பின்னர் அஷ்வின் மட்டும் நன்றாக ஆடி 38 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வில் யங் மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக ஆடினர். ஆரம்பத்தில் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர்கள், முதல் 10 ஓவரில் மிக நிதானமாக ஆடி 18 ரன்கள் மட்டுமே அடித்தனர். களத்தில் நிலைத்த பின்னர் ஓரளவிற்கு வேகமாக ஸ்கோர் செய்ய ஆரம்பித்தனர். 

ரவிச்சந்திரன் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களையும் திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடுகின்றனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த வில் யங் தொடர்ந்து சிறப்பாக ஆட, டாம் லேதமும் அரைசதம் அடித்தார். 2ம் நாள் ஆட்டம் முடியும் வரை இந்திய பவுலர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் அடித்துள்ளது. வில் யங் 75 ரன்களுடனும், டாம் லேதம் 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடியையே பிரிக்கமுடியாமல் இந்திய பவுலர்கள் திணறிவருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios