இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டிலும் காலின் முன்ரோவும் களத்திற்கு வந்தனர். தொடக்கம் முதலே இருவரும் அடித்து ஆட ஆரம்பித்தனர். பும்ரா வீசிய முதல் ஓவரில் கப்டில் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 7 ரன்கள் அடிக்கப்பட்டன. 

இதையடுத்து ஷர்துல் தாகூர் வீசிய இரண்டாவது ஓவரில் கப்டில் ஒரு பவுண்டரியும் முன்ரோ ஒரு சிக்ஸரும் அடித்தனர். ஷமி வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 7 ரன்கள் அடிக்கப்பட்டது. இதையடுத்து ஷர்துல் தாகூர் வீசிய 4வது ஓவரை முன்ரோ பொளந்துகட்டிவிட்டார். அந்த ஓவரில் 2 பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்தார் முன்ரோ. பும்ரா வீசிய 5வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்கள். 

பவர்ப்ளேயின் கடைசி ஓவரை ஷமி வீச, அந்த ஓவரில் கப்டில், ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் அடித்தார். இதையடுத்து பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி 68 ரன்கள் அடித்தது. கப்டிலும் முன்ரோவும் களத்தில் நிலைத்துவிட்டதுடன் அடித்தும் ஆடிவருகின்றனர்.