ஐபிஎல்லை நடத்தும் போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் மூன்றாவதாக ஒரு நாடும் போட்டியில் இணைந்துள்ளது. 

உலகின் மிகப்பணக்கார டி20 லீக் தொடர் ஐபிஎல் தான். இரண்டே மாதத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதால் வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். ஐபிஎல்லை நடத்தவில்லையென்றால், பிசிசிஐக்கு ரூ.4000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். 

அதனால் ஐபிஎல்லை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது பிசிசிஐ. ஆனால் எப்போது, எங்கே, எப்படி என்பதுதான் பெரும் கேள்விகளாக இருக்கின்றன. அக்டோபர் 18ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தள்ளிப்போக வாய்ப்புள்ளது. அதனால் செப்டம்பர் இறுதி முதல் நவம்பர் மாதம் வரை ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஆனால் டி20 உலக கோப்பையை ஒத்திவைப்பது குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஐசிசியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறது பிசிசிஐ.

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதால், ஐபிஎல்லை நடத்தினாலும் இந்தியாவில் நடத்த முடியுமா என்பது சந்தேகமாகியுள்ளது. இதற்கிடையே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் நாட்டில் ஐபிஎல்லை நடத்த இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ-யிடம் அனுமதி கோரியிருக்கின்றன. அந்த பட்டியலில் தற்போது மற்றொரு நாடும் இணைந்திருக்கிறது. 

இதுகுறித்து இந்தியா டுடேவிடம் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், இந்தியாவில் ஐபிஎல்லை நடத்துவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் ஒருவேளை இந்தியாவில் நடத்தமுடியவில்லை என்றால், வெளிநாட்டில் நடத்தப்படும். இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஐபிஎல்லை நடத்த அனுமதி கோரியுள்ளனர். இதுகுறித்து அனைத்து அணிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், பிராட்கேஸ்டர் உட்பட அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.