உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில்,பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவருமே ட்ரெண்ட் போல்ட்டின் அடுத்தடுத்த ஓவர்களில் தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ராகுல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நிதானமாக ஆடிய ஹர்திக் பாண்டியா, பெரிய இன்னிங்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு 30 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தோனியும் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அதிகமான ஓவர்கள் களத்தில் நின்று ஆடி தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை ஜடேஜா சரியாக பயன்படுத்தி கொண்டார். அரைசதம் அடித்த அவரும் 54 ரன்களில் நடையை கட்ட, இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

180 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முன்ரோ மற்றும் கப்டில் ஆகிய இருவரையும் முறையே பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா வெளியேற்றினர். அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில்லியம்சன் - ரோஸ் டெய்லர் ஜோடி போட்டியை இந்திய அணியிடமிருந்து பறித்தது. அவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். இருவருமே அரைசதம் அடித்தனர். வில்லியம்சன் 67 ரன்களிலும் டெய்லர் 71 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 38வது ஓவரில் இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.