2021ம் ஆண்டுக்கான ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை நியூசிலாந்து வீரர் டேரைல் மிட்செல் வென்றுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டிற்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஐசிசி விருதுகளை வழங்கி கௌரவித்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர், டெஸ்ட் வீரர், டி20 வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய விருதுகளுடன், சிறப்பான செயல்பாட்டிற்காக ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதும் வழங்கப்படுகிறது.

அந்தவகையில், 2021ம் ஆண்டுக்கான ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது நியூசிலாந்து வீரர் டேரைல் மிட்செலுக்கு வழங்கப்படுகிறது.

2021ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில் இக்கட்டான நிலையிலும், ஆட்டத்தின் ஸ்பிரிட்டை கடைபிடித்தார் டேரைல் மிட்செல்.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டபோது அடில் ரஷீத் பந்துவீசினார். அப்போது அடில் ரஷீத் வீசிய பந்தை ஜிம்மி நீஷம் அடித்தார். அந்த பந்தை அடில் ரஷீத் பிடிக்க முயற்சிக்கும்போது டேரைல் மிட்செலின் மீது மோதினார். அதனால் அவரால் அந்த பந்தை பிடிக்க முடியவில்லை. எனவே, தன் மீது மோதியதால் அந்த பந்தை ரஷீத்தால் பிடிக்க முடியாமல் போனதால், அதையும் மீறி அந்த ரன் ஓடுவது சரியானதல்ல என்று டேரைல் மிட்செல் அந்த ரன்னை ஓடாமல் மறுத்தார்.

நியூசிலாந்து அணி இக்கட்டான நிலையில் இருந்தபோதும் கூட, அந்த நெருக்கடியான சூழலிலும் ஆட்டத்தின் ஸ்பிரிட்டை மீறி நடந்துகொள்ளாமல் ஸ்பிரிட்டுடன் நடந்துகொண்டார் டேரைல் மிட்செல். அதற்காக, 2021ம் ஆண்டின் ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது டேரைல் மிட்செலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி, ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.