இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 273 ரன்களை அடித்தது. 274 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி, 251 ரன்கள் மட்டுமே அடித்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அணி, டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது. 2 போட்டிகளிலுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது நியூசிலாந்து அணி. 

இந்த போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. நியூசிலாந்து அணியில் ஆடிய பிளேயிங் லெவன் வீரர்களை தவிர, மாற்று வீரராக ஆட உடற்தகுதியுடன் ஒரு வீரர் கூட பென்ச்சில் இல்லை. வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக ஆடவில்லை. ஸ்காட் குஜ்ஜெலினும் காயம் காரணமாக அணியில் இல்லை. சாண்ட்னெர் மட்டுமே மாற்று வீரராக பென்ச்சில் இருந்தார். 

ஆனால் இன்றைய போட்டியின் போது, அவருக்கும் வயிற்றில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் மாற்று வீரரே நியூசிலாந்து அணியில் இல்லை. எனவே நியூசிலாந்து அணி ஃபீல்டிங் செய்த போது, ஃபீல்டிங்கிற்கு மாற்று வீரர் தேவை எனும்போது, வேறு வழியில்லாமல் அந்த அணிய்ன் ஃபீல்டிங் கோச் லூக் ராஞ்சியே களத்திற்கு சென்று ஃபீல்டிங் செய்தார். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. இங்கிலாந்து ஃபீல்டிங் பயிற்சியாளர் காலிங்வுட், மாற்று வீரர் இல்லாத சூழலில் ஃபீல்டிங் செய்திருக்கிறார். அதேபோல இன்று நியூசிலாந்து அணியின் கோச் ஃபீல்டிங் செய்தார்.