உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அரையிறுதியில் இரு அணிகளும் மோதுகின்றன. அதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு டபுளாக எகிறியுள்ளது. 

இந்திய அணியில் ரோஹித் சர்மா டாப் ஃபார்மில் இருக்கிறார். ராகுலும் சிறப்பாக ஆடிவருகிறார். விராட் கோலியை பற்றி சொல்லவே தேவையில்லை. மிடில் ஆர்டரிலும் ரிஷப் பண்ட், ஹர்திக், தினேஷ் கார்த்திக் என பெரும் அதிரடி படையே உள்ளது. பும்ரா - புவனேஷ்வர் குமார் கூட்டணியாக இருந்தாலும் சரி, பும்ரா - ஷமி கூட்டணியாக இருந்தாலும் சரி, இரண்டு ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியுமே மிரட்டுகிறது. எனவே இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. 

நியூசிலாந்து அணியில் ஃபாஸ்ட் பவுலிங்கும் மிடில் ஆர்டரும் நன்றாக உள்ளது. ஆனால் தொடக்க ஜோடி ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. தொடர்ந்து நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் ஏமாற்றிவருகின்றனர். அதிரடி மன்னன் கப்டில் ஃபார்மில் இல்லை. முன்ரோ சரியாக ஆடாததால் கடைசி 2 லீக் போட்டிகளில் அவர் நீக்கப்பட்டு நிகோல்ஸ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அவரும் ஏமாற்றத்தையே அளித்தார். கப்டில் இரட்டை இலக்கத்தை எட்டுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. கப்டிலுக்கு நல்ல ஸ்டார்ட்டே கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை அவர் பெரிய இன்னிங்ஸாக மாற்றமுடியாமல் தவிக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த அபாயகரமான அதிரடி வீரர் கப்டில். அவர் ஃபார்மில் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் கண்டிப்பாக நன்றாக ஆட வேண்டும். இல்லையெனில் அந்த அணியின் நிலை கஷ்டம் தான். 

நாளை இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி நடக்கவுள்ள நிலையில், கப்டில் குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், கப்டில் ஒருநாள் போட்டிகளில் ஏராளமான சதம் அடித்துள்ளார். அவர் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். தற்போது ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் அவருக்கு நம்பிக்கையூட்டி அனுப்புவதே எங்கள் பணி. அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் களத்திற்கு சென்று அவரது இயல்பான ஆட்டத்தை வேண்டும். அவர் அடுத்த போட்டியில் 150 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அடிக்கலாம். யாருக்கு தெரியும்.. அவர் அப்படி அடித்துவிட்டால் அவரது அவுட் ஆஃப் ஃபார்ம் குறித்து யாரும் பேசமாட்டோம். 

ஆனாலும் நியூசிலாந்து பயிற்சியாளருக்கு இவ்வளவு ஆசை கூடாது.. கப்டில் 150 அடிப்பாராம்.. அதுவும் இந்தியாவுக்கு எதிரா.. இப்போ இருக்குற இந்தியாவின் பவுலிங் யூனிட்டுக்கு எதிரா இதெல்லாம் நடக்குற காரியமா..?