நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் 1-1 என டெஸ்ட் தொடர் சமனானது. 

டெஸ்ட் தொடர் சமனில் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் ஆடிவருகின்றன. இதில் முதல் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் ஆடியது. 

இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா, ஃபெர்னாண்டோஸ் ஆகியோர் சோபிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கும் சேர்த்து மற்றொரு தொடக்க வீரரான குசால் மெண்டிஸ் அடித்தார். அதிரடியாக ஆடிய அவர், அரைசதம் கடந்தார். 53 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து டிம் சௌதியின் பந்தில் ஆட்டமிழந்தார். 

டிக்வெல்லா 33 ரன்களும் ஷனாகா 17 ரன்களும் உதானா 15 ரன்களும் அடித்தனர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. 

175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே சோபிக்கவில்லை. கோலின் முன்ரோ, மலிங்கா வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதுவும் கோல்டன் டக். அதன்பின்னர் மார்டின் கப்டிலும் 11 ரன்களில் அவுட்டானார். நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிம் சேஃபெர்ட்டும் சோபிக்கவில்லை. அதனால் நியூசிலாந்து அணி 39 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கோலின் டி கிராண்ட் ஹோமும் ரோஸ் டெய்லரும் இணைந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக ஆடினர். ஆனால் இருவருமே அரைசதத்தை சொற்ப ரன்களில் தவறவிட்டு ஆட்டமிழந்தனர். டி கிராண்ட் ஹோம் 28 பந்துகளில் 44 ரன்களிலும், ரோஸ் டெய்லர் 29 பந்துகளில் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அதிரடியாக ஆடியதால் அதன்பின்னர் வந்தவர்களுக்கான வேலை எளிதாகிவிட்டது. 

மிட்செலும் சாண்ட்னெரும் இணைந்து கடைசி ஓவரில் இலக்கை எட்டி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர். 19.3 ஓவரில் இலக்கை எட்டி நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.