Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றில் 2வது வெற்றியை பெற்றது நியூசிலாந்து..!

டி20 உலக கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது நியூசிலாந்து அணி.
 

new zealand beat scotland by 16 runs in t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 3, 2021, 7:50 PM IST

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 1-லிருந்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

க்ரூப் 2-ல் பாகிஸ்தானுக்கு அடுத்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு, நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன் சேர்த்து இந்திய அணிக்கும் உள்ளது.

இந்நிலையில், துபாயில் நடந்த இன்றைய போட்டியில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள நியூசிலாந்தும் ஸ்காட்லாந்தும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. எனவே நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீஷம், க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸர் (கேப்டன்), மேத்யூ க்ராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், காலம் மெக்லியாட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சாஃபியான் ஷாரிஃப், அலாஸ்டைர் இவான்ஸ், பிராட்லி வீல். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேரைல் மிட்செல் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதே ஓவரில் கேப்டன் கேன் வில்லியம்சன் டக் அவுட்டானார். டெவான் கான்வேவும் ஒரு ரன்னில் நடையை கட்ட, 52 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி.
 
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்ற மார்டின் கப்டிலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடினார் க்ளென் ஃபிலிப்ஸ். களத்தில் நிலைத்த பின்னர் 10 ஓவருக்கு பிறகு சிக்ஸர்களாக விளாசி தெறிக்கவிட்டார் மார்டின் கப்டில்.

காட்டடி அடித்து சதத்தை நெருங்கிய கப்டில், 93 ரன்னில் ஆட்டமிழந்து வெறும் ஏழே ரன்னில் சதத்தை தவறவிட்டார். 56 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கப்டில். ஃபிலிப்ஸ் 33 ரன்கள் அடித்தார். கப்டிலின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 172 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

173 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஸ்காட்லாந்து அணி வீரர்கள் நன்றாக அடித்து ஆடி இலக்கை சிறப்பாக விரட்டினர். ஆனால் ஸ்காட்லாந்து அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. கேப்டனும் தொடக்க வீரருமான கோயட்ஸெர் 17 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரரான முன்சி 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரிச்சி பெரிங்டன் (20), மேத்யூ க்ராஸ் (27), மெக்லியாட் (12) ஆகியோர் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. மைக்கேல் லீஸ்க் கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்ட நியூசிலாந்தை அச்சுறுத்தினாலும், அவரால் இலக்கை எட்டமுடியவில்லை. லீஸ்க் 20 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களை விளாச, ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 156 ரன்கள் அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி அடுத்துவரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். அந்த அணி இனிமேல் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிராக ஆடுவதால், வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios