பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 இன்று ஹாமில்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

பாகிஸ்தான் அணியில் சீனியர் வீரர் முகமது ஹஃபீஸை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர்கள் ரிஸ்வான் 22 ரன்களும், ஹைதர் அலி வெறும் 8 ரன்களும் மட்டுமே அடித்தனர். ஷாஃபிக் ரன்னே அடிக்காமல் அவுட்டாக, கேப்டன் ஷதாப் கான் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

சீனியர் வீரருக்கான பொறுப்புடன் ஆடிய முகமது ஹஃபீஸ், தனது அனுபவத்தை காட்டினார். சமகாலத்தின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களான நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட், டிம் சௌதி, ஜேமிசன், இஷ் சோதி ஆகியோரின் பவுலிங்கை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு ஆடி 57 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 99 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகவில்லை. கடைசி வரை களத்தில் இருந்தும் ஹஃபீஸால் சதமடிக்க முடியவில்லை. ஹஃபீஸின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 163  ரன்கள் அடித்தது.

164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் 21 ரன்களுக்கே ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான டிம் சேஃபெர்ட்டுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். சேஃபெர்ட்டும் வில்லியம்சனும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி பாகிஸ்தான் பவுலிங்கை பொளந்துகட்டினர். 

இருவருமே அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். சேஃபெர்ட் 84 ரன்களும் வில்லியம்சன் 57 ரன்களும் அடித்தனர். இவர்களின் அதிரடியால் கடைசி ஓவரின் 2வது பந்திலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, டி20 தொடரையும் வென்றது.