பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான், நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, கேப்டன் கேன் வில்லியம்சனின் அபார சதம்(129), ரோஸ் டெய்லர்(70), நிகோல்ஸ்(56), வாட்லிங்(73) ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸீல் 431 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான்(71) மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப்(91) ஆகிய இருவரையும் தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 239 ரன்கள் மட்டுமே அடித்தது.

192 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, ஐந்து விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்திருந்த நிலையில் 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

372 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி, 373 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. கடைசி இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியை விரைவில் சுருட்டிவிடலாம் என்று நியூசிலாந்து நினைத்திருக்கும். ஆனால் நியூசிலாந்தின் நினைப்பை சிதைத்தனர் பாகிஸ்தான் வீரர்கள்.

4ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் அடித்திருந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்தின் வெற்றிக்கு வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதுமே அசார் அலி ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஃபவாத் ஆலமும் கேப்டன் முகமது ரிஸ்வானும் மிகச்சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து 63 ஓவர்கள் பேட்டிங் ஆடி, ஐந்தாவது விக்கெட்டுக்கு 165 ரன்களை குவித்தனர். 191 பந்துகள் பேட்டிங் ஆடி 60 ரன்கள் அடித்து கேப்டன் ரிஸ்வான் ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஒருசில ஓவர்களிலேயே சதமடித்த ஃபவாத் ஆலமும் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் மற்ற வீரர்கள் கடைசி வரை களத்தில் நின்று, கடைசி நாள் ஆட்டத்தின் பவுலிங் கோட்டாவை முடித்து போட்டியை டிரா செய்ய முயன்றனர். ஆனால் நியூசிலாந்து பவுலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. கடைசி நாள் ஆட்டம் முடியவிருந்தநிலையில், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணி அதன் கடைசி விக்கெட்டை இழந்து, 2வது இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 101 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி தோற்றிருந்தாலும், நியூசிலாந்து கண்டிஷனில் நியூசிலாந்து பவுலிங்கிற்கு எதிராக கிட்டத்தட்ட கடைசி நாள் ஆட்டம் முழுவதும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி கடுமையாக போராடியது பாக்., அணி.