Asianet News TamilAsianet News Tamil

புள்ளப்பூச்சியை அடிக்கிற மாதிரி இந்திய அணியை அசால்ட்டா அடித்து காலி செய்து அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து..!

இந்திய அணி நிர்ணயித்த 111 ரன்கள் என்ற எளிய இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து  8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.
 

new zealand beat india by 8 wickets in t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 31, 2021, 10:38 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று மோதின. இந்த 2 அணிகளுமே பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிவிட்டு வந்து, வெற்றிக்கான தேடலுடன் மோதின.

இதன்பின்னர் இந்த 2 அணிகளும் மோதப்போகும் அணிகள், ஆஃப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து. இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுமே வெற்றி பெற வாய்ப்பிருப்பதால், இன்று இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டிதான், க்ரூப் 2ல் இருந்து அரையிறுதிக்கு முன்னேறப்போகும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியாக இருந்தது.

அதனால் கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியான இதில் 2 அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்திய அணியில் காயம் காரணமாக சூர்யகுமார் ஆடவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் எடுக்கப்பட்டார். புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் ஆடுகிறார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஷமி, பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிம் சௌதிக்கு பதிலாக ஆடம் மில்னே சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே, க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே.

இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டதால், ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறக்கப்படாமல் கேஎல் ராகுலுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். இஷான் கிஷன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் 18 ரன்னில் ஆட்டமிழக்க, இந்த போட்டியில் 3ம் வரிசையில் இறங்கிய ரோஹித் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கோலி(9), ரிஷப் பண்ட்(12), ஹர்திக் பாண்டியா(23), ரவீந்திர ஜடேஜா(26) ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய பேட்டிங் ஆர்டர் மறுபடியும் ஒருமுறை மளமளவென சரிந்தது. அதனால் 20 ஓவரில் 110 ரன்கள் மட்டுமே அடித்தது இந்திய அணி.

111 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டிலை 20 ரன்னுக்கு வீழ்த்தினார் பும்ரா. அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான டேரைல் மிட்செலும், கேப்டன் கேன் வில்லியம்சனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடி கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர்.

வெற்றிக்கு இன்னும் 15 ரன்களே தேவை என்ற நிலையில், அணியின் ஸ்கோர் 96 ரன்களாக இருந்தபோது டேரைல் மிட்செல் 49 ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஒருசில பவுண்டரிகளை அடித்து எளிதாக ஆட்டத்தை முடித்தார் கேன் வில்லியம்சன். இந்திய பவுலர்களால் நியூசிலாந்து பேட்டிங்கை ஒன்றுமே செய்ய முடியவில்லை. 15வது ஓவரிலேயே இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. 

இந்த தோல்வியின் மூலம் இந்த டி20 உலக கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவு கிட்டத்தட்ட தகர்ந்தது. இந்த டி20 உலக கோப்பையை ஃபேவரைட்ஸாக தொடங்கிய இந்திய அணியை புள்ளப்பூச்சியை அடிக்கிற மாதிரி அடித்து அசால்ட்டாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. இந்திய அணியின் இந்த அடுத்தடுத்த படுதோல்விகளை கிரிக்கெட் உலகிலேயே யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios