உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. ஒரு போட்டியில் வங்கதேசத்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

நியூசிலாந்தும் ஆஃப்கானிஸ்தானும் மோதிய மற்றொரு போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியை வெறும் 172 ரன்களுக்கு சுருட்டி, 173 ரன்கள் என்ற எளிதாக எட்டி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா சேஸாய் மற்றும் நூர் அலி ஜட்ரான் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 66 ரன்களை சேர்த்தனர். 34 ரன்களில் சேஸாய் அவுட்டாக, அதற்கு அடுத்த ஓவரிலேயே நூர் அலியும் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் வந்த ஆஃப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களில்  ஹஷ்மதுல்லா ஷாஹிடி மட்டுமே பொறுப்புடன் ஆடினார். ஒருமுனையில் அவர் களத்தில் நிலைத்து நிற்க, மறுமுனையில் ரஹ்மத் ஷா, குல்பாதின் நைப், முகமது நபி என ஆஃப்கானிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்ததற்கு இடையிலும் பொறுப்புடன் ஆடிய ஷாஹிடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் நெருக்கடிக்கும் ஆளான ஷாஹிடி, 59 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகளையும் லாக்கி ஃபெர்குசன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

172 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி ஆல் அவுட்டானதை அடுத்து 173 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் முன்ரோவுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். முன்ரோ 22 ரன்களில் ஆட்டமிழக்க, வில்லியம்சனுடன் அனுபவ வீரரான ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அனுபவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 ரன்களில் டெய்லர் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த வில்லியம்சன் 79 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். 

33வது ஓவரிலேயே இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது நியூசிலாந்து அணியின் 3வது வெற்றி. இதுவரை ஆடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளதால் 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திலேயே நீடிக்கிறது நியூசிலாந்து அணி. ஆட்டநாயகனாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் நீஷம் தேர்வு செய்யப்பட்டார்.