நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டி பெர்த்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவருகிறது. 

கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின், நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள இளம் வீரர் லபுஷேன், அபாரமாக ஆடி சதமடித்தார். தொடர்ச்சியாக 3வது இன்னிங்ஸில் சதமடித்த லபுஷேன், 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் தன் பங்கிற்கு அரைசதம் அடிக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டாம் லேதம் மற்றும் ஜீட் ராவல் ஆகிய இருவரும் முதல் இரண்டு ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சனும் அனுபவ வீரர் ரோஸ் டெய்லரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 

மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 76 ரன்களை சேர்த்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த வில்லியம்சன், ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டார்க் வீசிய பந்து வில்லியம்சனின் பேட்டில் பட்டும் எட்ஜ் ஆகி காற்றில் பறந்தது. இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற ஸ்மித், அதை அபாரமாக கேட்ச் செய்து வில்லியம்சனை பெவிலியனுக்கு அனுப்பினார். 

அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸ், வாக்னர், வாட்லிங் என ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டெய்லர் மட்டும் 80 ரன்களை குவித்தார். ஆனால் டெய்லராலும் பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியவில்லை. டெய்லரின் விக்கெட்டை நாதன் லயன் எடுத்தார். பின்வரிசையில் நிலைத்து நின்று வேகமாக ரன் சேர்த்த கோலின் டி கிராண்ட் ஹோமை ஸ்டார்க் வீழ்த்த, அதன்பின்னர் எஞ்சிய இரண்டு விக்கெட்டுகளும் அடுத்த சில ஓவர்களிலேயே விழுந்துவிட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணி வெறும் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

250 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி ஒரு ரன் எடுத்துள்ளது. உணவு இடைவேளைக்கு முன் ஒரு ஓவர் மட்டுமே வீசப்பட்டது. ஆஸ்திரேலிய அணி அதிக ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.