Asianet News TamilAsianet News Tamil

ஸ்மார்ட்டா போட்டு வில்லியம்சனை தூக்கிய இஷாந்த் சர்மா..! முதல் இன்னிங்ஸில் நியூசி., 249 ரன்களுக்கு ஆல் அவுட்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 

new zealand all out for 249 runs in first innings of icc wtc final
Author
Southampton, First Published Jun 22, 2021, 9:07 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் தடைபட்டதால், 2ம் நாள் தான் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே அரைசதம் அடித்தார். 54 ரன்கள் அடித்து 3ம் நாள் ஆட்டம் முடியவிருந்த நிலையில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

3ம் நாள் ஆட்ட முடிவில்  2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது. வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ம் நாளான நேற்றைய ஆட்டம் முழுவதுமே மழையால் ரத்தானது.

5ம் நாளான இன்றைய ஆட்டமும் மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்கு தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் முதல் செசனில் குறைந்தது 3 விக்கெட்டாவது இந்திய அணி வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதனால் மிகவும் டைட்டாக நல்ல லைன் & லெந்த்தில் பந்துவீசினர். ரன்னே கொடுக்காமல் டைட்டாக பந்துவீசி நெருக்கடியை அதிகரித்தனர். வில்லியம்சன், டெய்லர் ஆகிய இருவருமே ரன் அடிக்க முடியாமல் திணறினர். 14 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், எப்படியாவது ரன் அடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அடித்து ஆட முயற்சித்து ஷமியின் பந்தில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டெய்லர்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹென்ரி நிகோல்ஸை இஷாந்த் சர்மா வீழ்த்த, வாட்லிங்கை வெறும் ஒரு ரன்னில் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் ஷமி. இதையடுத்து 5ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் 3 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி.

உணவு இடைவேளைக்கு பிறகு காலின் டி கிராண்ட் ஹோம், கைல் ஜாமிசன், டிம் சௌதி ஆகியோர் ஒருமுனையில் அடித்து ஆட, மறுமுனையில் நிலைத்து ஆடினார் வில்லியம்சன்.  அடித்து ஆடிய கைல் ஜாமிசன், 16 பந்தில் 21 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று கடுமையாக போராடி நியூசிலாந்து அணியை காப்பாற்றிய வில்லியம்சன், 176 பந்தில் 49 ரன்கள் அடித்திருந்த நிலையில், அவருக்கு சர்ப்ரைஸாக திடீரென ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்மார்ட்டாக வீசி அவுட் ஆக்கினார் இஷாந்த் சர்மா. அதற்கு முந்தைய பந்தை ஃபுல் லெந்த்தில் வீசிய இஷாந்த் சர்மா, அடுத்த பந்தை ஷார்ட் பிட்ச்சாக வீசினார். அந்த லெந்த்தில் அந்த பந்தை எதிர்பார்த்திராத வில்லியம்சன், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து 49 ரன்னில் வெளியேறினார்.

டிம் சௌதி கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்கள் விளாச, முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி. கடைசி விக்கெட்டாக டிம் சௌதியை வீழ்த்தினார் ஜடேஜா. இதையடுத்து இந்திய அணியைவிட முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற்றது நியூசிலாந்து. 

32 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை டீ பிரேக்கிற்கு பிறகு இந்திய அணி தொடங்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios