இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ அணியும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து ஏ அணியும் வெற்றி பெற்றன. தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து ஏ அணி, மார்க் சாப்மேனின் அபாரமான சதத்தால் 50 ஓவரில் 270 ரன்களை அடித்தது. நியூசிலாந்து ஏ அணியின் தொடக்க வீரர்கள் ஒர்க்கர் மற்றும் ராச்சின் ரவீந்திரா ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். கேப்டன் டாம் ப்ரூஸ் வெறும் ஒரே ரன்னில் நடையை கட்டினார். 

ஆனால் ஃபிலிப்ஸும் டாம் பிளண்டெலும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவிற்கு ஸ்கோரை உயர்த்தி கொடுத்தனர். ஃபிலிப்ஸ் 35 ரன்களும் பிளண்டெல் 37 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் சாம்பேன் வெகுசிறப்பாக பேட்டிங் ஆடி நியூசிலாந்து ஏ அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சாப்மேனுடன் இணைந்து டாட் ஆஸ்டிலும் சிறப்பாக ஆடினார். 

105 ரன்களுக்கே நியூசிலாந்து ஏ அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடிய சாப்மேன் சதமடித்து அசத்தினார். அவருடன் இணைந்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடிய ஆஸ்டில் அரைசதம் அடித்தார். 56 ரன்கள் அடித்த அவர், 48வது ஒவரில் ஆட்டமிழந்தார். ஆனால் சதமடித்த சாப்மேன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் நியூசிலாந்து ஏ அணியின் ஸ்கோரை 270 ஆக உயர்த்தினார். சாப்மேன் 110 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். 

105 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய நியூசிலாந்து ஏ அணிக்கு சாப்மேன் சதமடித்து, 270 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை அடிக்க உதவி அணியை கரை சேர்த்தார். இதையடுத்து 271 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷாவும் ருதுராஜ் கெய்க்வாட்டும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

இருவரும் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 79 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி அரைசதமடித்த பிரித்வி ஷா, 38 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 55 ரன்களை விரைவில் விளாசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்டும் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். கேப்டன் மயன்க் அகர்வால் 24 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின்னர் இஷான் கிஷானும் விஜய் சங்கரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் இதற்கு முன்னர் பெரிதாக சோபிக்காத விஜய் சங்கர், இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஒரு முனையில் இஷான் கிஷான் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிக்கொண்டிருக்க, மறுமுனையில் க்ருணல் பாண்டியா, அவருக்க் ஒத்துழைப்பு கொடுத்து ஆடத்தவறி வெறும் 7 ரன்களில் அவுட்டானார். 

ஆனால் அதன்பின்னர் களத்திற்கு வந்த அக்ஸர் படேல் சிறப்பாக பேட்டிங் ஆடி இஷான் கிஷானுக்கு ஒத்துழைப்பு தந்தார். அக்ஸர் படேலின் ஒத்துழைப்பால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் அரைசதம் அடித்ததுடன், இலக்கை நோக்கி அணியை நகர்த்தி கொண்டிருந்தார். ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், அக்ஸர் படேல் 49வது ஓவரின் இரண்டாவது பந்தில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி 2 ஓவர்களில் இந்தியா ஏ அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 49வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரி அடித்த அக்ஸர் படேல், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மூன்றாவது பந்தில் பவுண்டரியும் நான்காவது பந்தில் 2 ரன்களும் அடித்த இஷான் கிஷான், ஐந்தாவது பந்தில் சிங்கிள் அடித்தார். கடைசி பந்தை எதிர்கொண்ட ராகுல் சாஹர் அந்த பந்தில் ஆட்டமிழந்தார். 49வது ஓவரில் 11 ரன்கள் அடிக்கப்பட்டது.

Also Read - 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டனின் துணிச்சலான முடிவு.. நம்ம டீமும் செம கெத்துதான்

எனவே கடைசி ஓவரில் இந்தியா ஏ அணியின் வெற்றிக்கு வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் அடிக்காத இஷான், அடுத்த பந்தில் சிங்கிள் தான் அடித்தார். இதையடுத்து அடுத்த இரண்டு பந்தில் இந்தியா ஏ அணியின் கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது நியூசிலாந்து ஏ அணி. இதையடுத்து 2-1 என இந்தியா ஏ அணி ஒருநாள் தொடரை இழந்தது.