சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதி போட்டி சூரத்தில் நடந்தது. இந்த போட்டியில் கர்நாடகாவும் தமிழ்நாடும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணி 20 ஓவரில் 180 ரன்களை குவித்தது. 181 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணி 179 ரன்கள் அடித்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது. 

181 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணிக்கு, கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை. கிருஷ்ணப்பா கௌதம் வீசிய கடைசி ஓவரின் முதலிரண்டு பந்துகளிலும் பவுண்டரிகளை விளாசிய அஷ்வின், எஞ்சிய 4 பந்தில் 5 ரன்கள் மட்டுமே தேவை என்பதால், பவுண்டரிகள் அடித்த உற்சாகத்திலும் வெற்றி பெற போகிறோம் என்ற நம்பிக்கையிலும், ஓவரா சத்தம் போட்டு கொண்டாடினார் அஷ்வின். ஆனால் அவர் சற்றும் எதிர்பார்த்திராத விதமாக தமிழ்நாடு அணி எஞ்சிய 4 பந்தில் 3 ரன்கள் மட்டுமே அடித்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. 

அணி வெற்றி பெறுவதற்கு முன்னாடியே அஷ்வின் கொண்டாடியதை ரசிகர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். டுவிட்டரில் ரசிகர்கள் அஷ்வினை வச்சு செய்கின்றனர். 2016 டி20 உலக கோப்பையில், இந்தியா - வங்கதேசம் இடையே பெங்களூருவில் நடந்த போட்டியில் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. இந்திய அணி நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு, கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 

ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மஹ்மதுல்லா சிங்கிள் தட்ட, அடுத்த இரண்டு பந்திலும் பவுண்டரி அடித்த முஷ்ஃபிகுர் ரஹீம், ஆர்வக்கோளாறில் ஏதோ வெற்றியே பெற்றுவிட்டதுபோல கொண்டாடினார். ஆனால் அடுத்த பந்திலேயே ரஹீமை வீழ்த்தினார் ஹர்திக். அடுத்த இரண்டு பந்துகளிலும் விக்கெட் விழ, இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஷ்வின் தற்போது வெற்றிக்கு முன் கொண்டாடியதை, அந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.