இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இந்திய கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர். இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டு உலக கோப்பைகளையும் இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர். 

2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாத யுவராஜ் சிங், கடந்த ஆண்டு ஐபிஎல் உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார். 

கொரோனா ஊரடங்கு காலத்தில், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டும் வரும் யுவராஜ் சிங், ரோஹித் சர்மாவுடனான  உரையாடலில் பேசிய விஷயம், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

யுவராஜ் சிங் - ரோஹித் சர்மா உரையாடலின்போது, சாஹல் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது குறித்து பேசிய யுவராஜ் சிங், சாஹல் மாதிரியான ஆட்களுக்கு(இந்த இடத்தில் தான் சாதியை சுட்டிக்காட்டும் விதமாக பேசியிருக்கிறார்) உருப்படியாக செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. அவர் ஷேர் செய்யும் வீடியோக்களை பார்த்தீர்களா? என்று கூறும்போது, சாதியை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார். 

அந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவை பார்த்து யுவராஜ் சிங்கின் மீது அதிருப்தியடைந்த ரசிகர்கள், உங்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். நீங்கள் இப்படி பேசிவிட்டீர்களே..? என்றும் சாதிய ரீதியில் தாக்கி பேசிய யுவராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரசிகர்கள் டுவிட்டரில் வலியுறுத்திவருகின்றனர். 

அதற்காக மன்னிப்பு கேள் யுவராஜ் சிங் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டும் செய்தனர் ரசிகர்கள். அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, யுவராஜ் சிங்கை மன்னிப்பு கேட்குமாறு ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.