அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அந்த அணியின் வீரரை அவுட்டாக்க வாய்ப்பிருந்தும், மனசாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்ளாமல், ஸ்பிரிட்டுடன்  நேபாள விக்கெட் கீப்பர் நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

கிரிக்கெட் ஜெண்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படுகிறது. அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் விதமாக அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஓமனில் நடந்துவரும் குவாட்ராங்குலர் தொடரில் நேபாளம் - அயர்லாந்து இடையேயான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 127 ரன்கள் அடித்தது. 128 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நேபாள அணி 111 ரன்கள் மட்டுமே அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நேபாள அணி இந்த போட்டியில் தோற்றிருந்தாலும், நேபாள விக்கெட் கீப்பரின் செயல்பாடு அனைவரது இதயங்களையும் வென்றுள்ளது.

அயர்லாந்து பேட்டிங்கின் 19வது ஓவரை கமால் சிங் வீசினார். அடைரும் மெக்பிரைனும் களத்தில் இருந்தனர். அந்த ஓவரின் 3வது பந்தை அடைர் எதிர்கொண்டு ஆடினார். அந்த பந்தை அடைர் அடித்துவிட்டு ஓட, மெக்பிரைனும் ரன் ஓடினார். மெக்பிரைன் ரன் ஓடும்போது, அந்த பந்தை பிடிக்கச்சென்ற பவுலர் மெக்பிரைன் மீது மோதியதால் அவர் கீழே விழுந்தார். பந்தை பிடித்த பவுலர் அதை விக்கெட் கீப்பரிடம் த்ரோ அடிக்க, பந்தை பிடித்து ரன் அவுட் செய்ய போதுமான நேரம் இருந்தும், மெக்பிரைன் கீழே விழுந்ததால் தான் அவரால் ரன் ஓடமுடியவில்லை என்ற காரணத்தால் ரன் அவுட் செய்யாமல் தவிர்த்தார் நேபாள விக்கெட் கீப்பர் ஆசிஃப் ஷேக். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஆசிஃபை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.


Scroll to load tweet…