ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலராக நேதன் லயன் திகழ்ந்துவருகிறார். கடந்த பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்யும் அனைவரும் கண்டிப்பாக நேதன் லயனை அந்த அணியில் தேர்வு செய்யுமளவிற்கு, கடந்த பத்தாண்டில் சிறப்பாக வீசியிருக்கிறார் நேதன் லயன். கடந்த பத்தாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த ஸ்பின்னராக நேதன் லயன் திகழ்ந்துவருகிறார். 

நான்காவது இன்னிங்ஸில் எதிரணியின் விக்கெட்டுகளை சரிப்பதில் நேதன் லயன் வல்லவர். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக ஆடி விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்து, அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார். இந்நிலையில், இளம் வலது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஸ்வெப்சனுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நேதன் லயனுக்கு ஓய்வளித்துவிட்டு ஸ்வெப்சனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஷேன் வார்னுக்கு பதிலடி கொடுத்துள்ள நேதன் லயன், ஸ்டூவர்ட் மெக் கில்லும் ஷேன் வார்ன் காலத்தில் ஆடிய ரிஸ்ட் ஸ்பின்னர் தான். அவருக்கு வழிவிட்டு என்றைக்காவது ஒதுங்கியிருக்கிறாரா ஷேன் வார்ன்..? என்று நியாயமான கேள்வியெழுப்பினார்.

மேலும், ஓய்வெடுக்கும் எந்த ஆஸ்திரேலிய வீரரையும் நான் பார்த்ததில்லை. டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. இப்போதைய ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் ஆர்டரில் எனக்கு ஓய்வளிக்க வேண்டும் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அதில் ஆட கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் யாரும் இழக்க விரும்பமாட்டார்கள். ஸ்வெப்சன் திறமையான ஸ்பின்னர். அவருடன் இணைந்து பந்துவீச விரும்புகிறேன் என்று நேதன் லயன் தெரிவித்தார்.