இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய ஆஷஸ் தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. 

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கி 2 ஓவர்களில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 

இந்நிலையில், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த, அஷ்வின் இங்கிலாந்தில் பந்துவீசியதை பார்த்து கற்றுக்கொள்ளப்போவதாக ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் தெரிவித்துள்ளார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரண்டு ஆஃப் ஸ்பின்னர்கள் அஷ்வினும் நாதன் லயனும்தான். லயன் 343 டெஸ்ட் விக்கெட்டுகளையும் அஷ்வின் அவரை விட ஒரு விக்கெட் குறைவாகவும் வீழ்த்தியுள்ளார். இருவருமே சமமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், அஷ்வின் லயனை விட 21 போட்டிகள் குறைவாக ஆடி 342 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அப்படி பார்க்கையில், லயனை விட அஷ்வின் தான் வெற்றிகரமான ஸ்பின்னர். 

இந்நிலையில், ஆஷஸ் தொடர் குறித்து பேசிய நாதன் லயன், அஷ்வினின் பவுலிங்கை நிறைய பார்த்திருக்கிறேன். கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அவர் வீசியதையும் பார்த்திருக்கிறேன். அஷ்வின் இங்கிலாந்தில் வீசியதை பார்த்து நிறைய கற்றிருக்கிறேன் என்று லயன் தெரிவித்துள்ளார்.