Asianet News TamilAsianet News Tamil

பழனியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடராஜன்..!

ஆஸி., சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் அசத்திய தமிழகத்தை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் நடராஜன், பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
 

natarajan went to palani temple gets his head tonsured
Author
Palani, First Published Jan 31, 2021, 4:31 PM IST

ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் நெட் பவுலராக எடுக்கப்பட்டு, வருண் சக்கரவர்த்தியின் காயத்தால் டி20 அணியில் இடம்பெற்று, அதில் அருமையாக பந்துவீசி, கேப்டன் கோலியின் நன்மதிப்பை பெற்று ஒருநாள் அணியிலும் இடம்பெற்ற நடராஜன், அதிலும் அசத்தினார். பின்னர் டெஸ்ட் தொடரின்போது பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் என முக்கியமான ஃபாஸ்ட் பவுலர்கள் அனைவருமே காயத்தால் வெளியேற, டெஸ்ட் அணியிலும் அறிமுகமாகி, அறிமுக இன்னிங்ஸிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் நடராஜன்.

டி20 தொடரை வென்றபோது, கோப்பையை வென்ற கேப்டன் கோலி, நடராஜனிடம் கொடுத்து அழகுபார்த்தார். அதேபோல டெஸ்ட் கோப்பையை வென்ற கேப்டன் ரஹானேவும், நடராஜனிடம் கோப்பையை கொடுத்து அவரை அங்கீகரித்து கௌரவப்படுத்தினார். ஒரே சுற்றுப்பயணத்தில் 3 விதமான போட்டிகளிலும் அறிமுகமான ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் நடராஜன்.

நடராஜன் ஆஸி.,யில் இருந்தபோதே அவருக்கு இங்கு குழந்தையும் பிறந்தது. ஆஸி.,யில் இருந்ததால் குழந்தையை நடராஜனால் உடனே பார்க்க முடியவில்லை என்றாலும், ஆஸி.,யில் டெஸ்ட் தொடரை வென்று வெற்றியுடன் சொந்த ஊருக்கு திரும்பி, இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் குழந்தையை பார்த்தார். வெற்றியுடன் ஆஸி.,யிலிருந்து ஊர் திரும்பிய நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி(முருகன்) கோவிலுக்கு சென்ற நடராஜன், மலை அடிவாரத்தில் முடி காணிக்கை செய்யும் இடத்தில் மொட்டையடித்து நேர்த்திக்கடனை செலுத்தியதுடன், ரோப்கார் மூலம் மேலே கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து திரும்பினார். நடராஜன் வந்திருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள், நடராஜனை காண குவிந்தனர். கூட்டத்தை தவிர்க்க உடனடியாக நண்பர்களுடன் காரில் ஏறிச்சென்றார் நடராஜன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios