விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஐசிசி தொடர்களை வெல்ல முடியாததற்கான காரணத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சுட்டிக்காட்டியுள்ளார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று விதமான போட்டிகளிலும் வெற்றிகளை குவித்தாலும், ஒரு ஐசிசி தொடரை கூட வென்றதில்லை. தோனி தலைமையிலான இந்திய அணி, 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட இந்திய அணி வெல்லவில்லை. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியிலும் 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையின் அரையிறுதியிலும் தோற்றது இந்திய அணி. இந்திய அணி, ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் சரியாக ஆடாமல் கோப்பையை இழந்தது. கோலி தலைமையிலான இந்திய அணியின் மீது கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. லீக் சுற்றில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்த இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 

இந்நிலையில், இந்திய அணி எந்த இடத்தில் தவறவிடுகிறது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். இதுகுறித்து பேசியுள்ள நாசர் ஹுசைன், அணி தேர்வில் கேப்டன் விராட் கோலி எவ்வளவு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்கிறார் என்று தெரியவில்லை. ஐசிசி தொடர்களுக்கு சிறந்த அணியை தேர்வு செய்யாததுதான் இந்திய கிரிக்கெட் செய்யும் தவறு. ரோஹித் சர்மாவும் கோலியும் அவுட்டாகி, 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டால் இந்திய அணி அவ்வளவுதான். மிடில் ஆர்டரே கிடையாது. அதுதான் பிரச்னையாக அமைந்தது என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.