தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் நிர்வாகிகள் தேர்தல் வரும் அக்டோபர் 22ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் 24ம் தேதிக்குள் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டும் என சிஓஏ அறிவுறுத்தியிருந்தது. 

அந்தவகையில், அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக, என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரூபா ஒருவர் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்ததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவரும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத். ரூபாவின் கணவர் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டுவந்தார். கடந்த 2013 ஐபிஎல் சீசனில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் புகார் காரணமாக அவருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.