Asianet News TamilAsianet News Tamil

நான் கேப்டனா இருந்தால், அந்த பையன் இல்லாத டீமே இருக்காது; ஸ்பெஷல் பிளேயர்! இந்திய வீரருக்கு முரளிதரன் புகழாரம்

ஹர்திக் பாண்டியா ஒரு ஸ்பெஷல் வீரர் என்று இலங்கை முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

muttiah muralitharan praises hardik pandya as special player
Author
Colombo, First Published Jul 25, 2021, 3:33 PM IST

இந்திய அணியில் கபில் தேவுக்கு பிறகு கிடைத்த சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா. மிரட்டலான பவுலிங், அசத்தலான ஃபீல்டிங், அதிரடி பேட்டிங் என அனைத்துவகையிலும்  அணிக்காக பங்களிப்பு செய்யக்கூடிய மதிப்புமிகு வீரர் ஹர்திக் பாண்டியா.

இந்திய அணியில் இடம்பிடித்த ஆரம்ப கட்டத்திலேயே, அணியின் அசைக்க முடியாத சக்தியாகவும் நிரந்தர வீரராகவும் உருவெடுத்தார் ஹர்திக் பாண்டியா. அவரது கிரிக்கெட் கெரியருக்கு பெரிய பிரச்னையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை. அந்த தொடரில் அவரது முதுகுப்பகுதியில் காயமடைந்ததையடுத்து, அதிலிருந்து மீண்டுவர அவருக்கு அதிக காலம் தேவைப்பட்டது.

அந்த காயத்திலிருந்து மீண்டு வந்தாலும், அவரால் முன்புபோல் பவுலிங் போடமுடியவில்லை. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதுதான் அவருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க காரணமே. அப்படியிருக்கையில், அவர் பவுலிங் போடமுடியாதது, இந்திய அணியில் அவரது இடத்தை நிரந்தரமற்றதாக்கியது. ஆனாலும் அவர் சிறந்த வீரர் என்பதால் இந்திய அணியில் எடுக்கப்படுகிறார். ஆனால், அவர் எப்போது மீண்டும் பழையபடி பந்துவீசுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டி20 உலக கோப்பை அக்டோபர் - நவம்பரில் நடக்கவுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா, பேட்டிங் மற்றும் பவுலிங் என எதிலுமே சிறந்த பங்களிப்பு செய்யவில்லை. இரண்டிலுமே ஏமாற்றமளித்தார். இதையடுத்து இலங்கைக்கு எதிராக நடக்கும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோவில் பேசியுள்ள முத்தையா முரளிதரன், ஹர்திக் பாண்டியா ஸ்பெஷல் பிளேயர். நான் மட்டும் கேப்டனாக இருந்தால் உலகின் எந்த அணியிலும் அவரை எடுப்பேன். அவர் மிகத்திறமையானவர். 140 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீசக்கூடியவர். நல்ல வேரியேஷனையும் பெற்றிருக்கிறார். ஆனால் காயம் காரணமாகத்தான் அவரால் முன்புபோல் பந்துவீச முடியவில்லை என்று நினைக்கிறேன்.

அவர் முதல் 2 ஓவர்களில் ஆட்டமிழக்கலாம். ஆனால் அவர் 20-30 பந்துகள் பேட்டிங் ஆடினால் அவர் அரைசதம் அடித்துவிடுவார். 70 பந்துகள் பேட்டிங் ஆடினால் அவர் வேற லெவலில் ஸ்கோர் செய்வார். அவரை 7 அல்லது 8ம் வரிசையில் பேட்டிங் ஆடவைக்க வேண்டும் என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios