தோனி மிகச்சிறந்த கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனும் தோனி தான்.

இந்திய அணியின் கேப்டனாக மட்டுமல்லாது, ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் தனது கேப்டன்சி திறனை இந்த உலகிற்கு காட்டினார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி ஆடிய 10 சீசன்களில், அனைத்திலுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி சிஎஸ்கே தான். அதுமட்டுமல்லாமல் ஆடிய 10 சீசன்களில் 8 முறை இறுதி போட்டிக்கு சென்ற சிஎஸ்கே அணி, 3 முறை கோப்பையை வென்றது.

ஒரு கேப்டனாக இந்திய அணிக்கும் சிஎஸ்கேவிற்கும் நிறைய வெற்றிகளையும் கோப்பைகளையும் சாதனைகளையும் பெற்றுக்கொடுத்தார் தோனி. தோனியின் அபாரமான கேப்டன்சி திறன், வீரர்களை அவர் அணுகும் முறை, வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் உத்தி, களவியூகம், சரியான உள்ளுணர்வு, நிதானமான அணுகுமுறை, சாமர்த்தியமான சிந்தனை ஆகியவைதான் அவரை வெற்றிகரமான கேப்டனாக உயர்த்தியது. 

இந்நிலையில், தோனியின் கேப்டன்சியில் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் ஆடிய, உலகின் ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின் ஜாம்பவானும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரருமான முத்தையா முரளிதரன், தோனியின் கேப்டன்சியை புகழ்ந்து பேசியுள்ளார்.

அஷ்வினுடன் அவரது யூடியூப் ஷோவில் பேசிய முத்தையா முரளிதரன், 2007ல் இளம் கேப்டனான தோனி, இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார். அவரது தியரி பார்க்கவே நன்றாக இருக்கும். ஏனெனில், பந்தை பவுலரிடம் கொடுத்து, பவுலரையே ஃபீல்டிங் செட் செய்துகொள்ள சொல்வார். பவுலர் செட் செய்த ஃபீல்டிங் ஒர்க் அவுட் ஆகவில்லையென்றால் அதன்பின்னர் அவர் ஃபீல்டிங் செட் செய்வார்.

அதேபோல, பவுலர் நல்ல பந்தை வீசினால் உடனே கைதட்டி தனது பாராட்டை வெளிப்படுத்துவார். அந்த நல்ல பந்தில் பேட்ஸ்மேன் சிக்ஸரே அடித்தாலும் சரி, அந்த பந்து சிறப்பான பந்து என்றால் பாராட்டுவார் தோனி. பவுலர்களை நன்கு ஊக்கப்படுத்துபவர் தோனி. தவறையோ அல்லது குறையையோ சொல்லும்போது, அருகில் வந்து பவுலர்களிடம் மெதுவாகத்தான் சொல்வார். இதுமாதிரியான குணங்கள் தான் அவர் வெற்றிகரமான கேப்டனாக திகழ காரணம்.

தோனியின்ன் நிதானம் அவரது மிகப்பெரிய பலம். இளம் கேப்டனான தோனி, சீனியர் வீரர்களின் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்பார். அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்வார். ஆனால் கடைசியில் அவர் தான் முடிவெடுப்பார். அதுதான் ஒரு சிறந்த கேப்டனுக்கு அழகு. அப்படித்தான் தோனி கேப்டன்சி செய்தார். ஆனால் இவையனைத்தையும் விட, ஐபிஎல்லை பொறுத்தமட்டில் ஒரு அணிக்கு மேட்ச் வின்னர் தான் தேவை. அப்படியான மேட்ச் வின்னர்களை சரியாக தேர்வு செய்வதில் தோனி வல்லவர் என்று முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.