விசா சிக்கல், அவசர அவசரமாக நாடு திரும்பிய முஷ்தாபிஜூர் ரஹ்மான் – ஹைதராபாத் போட்டிக்கு வாய்ப்பில்லை!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரஹ்மான் இடம் பெறமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த ஆண்டை விட சிறப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து, நடந்த 2ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்களில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. சிஎஸ்கே விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தது.
இந்த போட்டிகளிலும் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரஹ்மான் 4, 2, 1 என்று மொத்தமாக 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கான பர்பிள் கேப் வென்றார். இவரைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வீரர் மாயங்க் யாதவ் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி 2ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் இடம் பெற வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. ஆம், அவர் நேற்று விசா பிரச்சனை காரணமாக வங்கதேசத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐபிஎல் 2024 தொடர் முடிந்த பிறகு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. அமெரிக்காவில் விசா கிடைப்பதில் சில சிக்கல் இருப்பதால், வங்கதேச கிரிக்கெட் வாரியம் விசா ஏற்பாடுகளை முன்னதாகவே செய்ய தொடங்கியுள்ளது.
இதனால் விசா ஏற்பாட்டிற்காக முஷ்தாபிஜூ ரஹ்மான் தாயகம் திரும்பியிருக்கிறார். இதன் காரணமாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. விசா பிரச்சனை சரியான பிறகு மீண்டும் இந்தியா வரும் முஷ்தாபிஜூர் ரஹ்மான் இந்த மாதம் முழுவதும் மட்டுமே சிஎஸ்கே அணியுடன் இணைந்து விளையாட இருப்பதாக சொல்லப்படுகிறது.
மே மாதம் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் இடம் பெறும் நிலையில் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.