இந்திய அணியில் 2000ம் ஆண்டு அறிமுகமான இடது கை ஸ்பின்னரான முரளி கார்த்திக், இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஆடவில்லை. வெறும் 8 டெஸ்ட் மற்றும் 37 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடினார். கங்குலியின் கேப்டன்சியில் தான் அதிகமாக ஆடினார். 

இந்திய அணியில் அவருக்கு நீண்டகால வாய்ப்பு கிடைக்கவில்லை. அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஆடியதால், முரளி கார்த்திக்கிற்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அப்போதைய இந்திய அணியின் கேப்டனும் இடது கை பேட்ஸ்மேனுமான கங்குலிக்கு, இடது கை ஸ்பின்னரான  முரளி கார்த்திக்கின் பவுலிங் ஈசியாக இருந்ததால் தான் முரளி கார்த்திக்கிற்கு நிரந்தர வாய்ப்பளிக்கவில்லை என்று ஒரு கருத்து பரவலாக இருந்தது. 

அந்த கருத்து வெறும் கட்டுக்கதை என்பதை உணர்த்தும் வகையில் முரளி கார்த்திக் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய முரளி கார்த்திக், கங்குலி இடது கை ஸ்பின்னரை நன்றாக ஆடுவது தான் காரணம் என்றால், என்னை ஏன் கேகேஆர் அணியில் மூன்று ஆண்டுகள் வைத்திருந்தார்? கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த தாதா(கங்குலி) எனக்கு ஆதரவளித்து அணியில் வைத்திருந்தார். அதேபோல அவர் புனே வாரியர்ஸ் அணிக்கு கேப்டனான பிறகும், என்னை இழக்க விரும்பாமல், புனே அணியிலேயே என்னை வைத்திருந்தார். 

சிஎஸ்கே அணி, புனே அணியிடம் என்னை டிரேடிங் செய்ய கேட்டது. ஆனால் என்னை விட்டுக்கொடுக்க முடியாது என்று தாதா சொன்னபிறகு தான், ஜடேஜாவை வாங்கியது சிஎஸ்கே அணி. என்னை எப்போதுமே இழக்கவோ ஒதுக்கவோ தாதா விரும்பியதில்லை. சிஎஸ்கே அணிக்கு எதிரான ஒரு போட்டியில், எனக்கு 104 டிகிரி காய்ச்சல். ஆனால் அந்த காய்ச்சலிலும் என்னை ஆடவைத்தார். புனேவில் நடந்த அந்த போட்டியில் முழுக்கை டிஷர்ட் அணிந்து ஆடினேன். அந்தளவிற்கு தாதா எனக்கு ஆதரவளித்தார். ஹர்பஜனும் கும்ப்ளேவும் ஆடிய காலத்திலேயே அவ்வப்போது என்னை அணியில் சேர்த்து ஆடவைத்தார். நான் கொஞ்ச சர்வதேச போட்டிகளிலாவது ஆடினேன் என்றால், அதற்கு தாதா தான் காரணம் என்று முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.