ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த சீசனில் இதுவரை டாஸ் வென்ற அனைத்து கேப்டன்களும் இலக்கை விரட்ட விரும்பிய நிலையில், முதல் முறையாக ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னையில் நடந்த போட்டிகளில் இலக்கை விரட்டும்போது கடைசி சில ஓவர்கள் பேட்டிங் ஆட மிகக்கடினமாக இருந்தது. ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்ததால், டெத் ஓவர்களில் அணிகள் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தன. எனவே இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி இலக்கை நிர்ணயிப்பது என்ற முடிவை ரோஹித் சர்மா எடுத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் மார்கோ ஜென்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த வலது கை ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னே சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த பிக்பேஷ் டி20 லீக்கில் மில்னே அருமையாக வீசியிருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, பும்ரா, டிரெண்ட் போல்ட்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அதன் பலவீனமாக இருக்கும் மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்தும் நோக்கில், 4 அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. ரிதிமான் சஹா, ஜேசன் ஹோல்டர், டி.நடராஜன், ஷபாஸ் நதீம் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக விராட் சிங், முஜிபுர் ரஹ்மான், கலீல் அகமது மற்றூம் அபிஷேக் ஷர்மா ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், முஜிபுர் ரஹ்மான், கலீல் அகமது.