ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 151 ரன்கள் அடித்து, 152 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), டேவிட் வில்லி, ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ். 

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, ராமன்தீப் சிங், முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ப்ரித் பும்ரா, பாசில் தம்பி.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் தடுமாற, மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா அதிரடியாக தொடங்கினார். 15 பந்தில் 26 ரன்கள் அடித்து ரோஹித் ஆட்டமிழக்க, டிவால்ட் பிரெவிஸ் 8 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து இஷான் கிஷன் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

திலக் வர்மா ரன்னே அடிக்காமல் ரன் அவுட்டானார். அவரைத்தொடர்ந்து பொல்லார்டும் டக் அவுட்டாக, 10.1 ஓவரில் 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன்பின்னர் தனி ஒருவனாக களத்தில் நின்று போராடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். 17வது ஓவரில் மும்பை அணி 100 ரன்களை கடந்தது. சிராஜ் வீசிய 19வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 3 சிக்ஸர்களை விளாச, அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரின் முதல் 3 பந்தில் ஒரு ரன் மட்டுமே வழங்கினார் ஹர்ஷல் படேல். 4 மற்றும் 5வது பந்துகளில் ரன் அடிக்காத சூர்யகுமார், கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாச, 20 ஓவரில் 151 ரன்கள் அடித்த மும்பை அணி, 152 ரன்களை ஆர்சிபிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.