IPL 2023: மதீஷா பதிரனா, தீபக் சாஹர் அபார பவுலிங்..! நெஹல் வதேரா அரைசதம்.. CSKவிற்கு எளிய இலக்கை நிர்ணயித்த MI
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவரில் 139 ரன்கள் அடித்து 140 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் நிலையில், சனிக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் ஆடிவருகின்றன.
11 புள்ளிகளை பெற்றுள்ள சிஎஸ்கே, 10 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகளுக்குமே இது முக்கியமான போட்டி. ஐபிஎல்லில் பரம எதிரி அணிகளான மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
IPL 2023: குஜராத்துக்கு எதிரான தோல்வி.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய சங்கக்கரா
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிம் டேவிட், நெஹல் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷ்த் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேமரூன் க்ரீன் - இஷான் கிஷன் இறங்கினர். ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஓபனிங்கில் வரவில்லை. கேமரூன் க்ரீன் 6 ரன்களுக்கு துஷார் தேஷ்பாண்டேவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா(0) மற்றும் இஷான் கிஷன் (7) ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார் தீபக் சாஹர்.
அதன்பின்னர் நெஹல் வதேராவுடன் நிதானமாக நின்று பார்ட்னர்ஷிப் அமைத்த மும்பை அணியின் முக்கியமான வீரரான சூர்யகுமார் யாதவும் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த வதேரா 64 ரன்கள் அடித்து பதிரனாவின் பந்தில் ஆட்டமிழந்தார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ் மற்றும் அர்ஷத் கான் ஆகியோரையும் மதீஷா பதிரனா தான் வீழ்த்தினார்.
20 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 140 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது. சிஎஸ்கே அணி சார்பில் மதீஷா பதிரனா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.