பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில், இந்த சீசனில் 2வது முறையாக பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.24 லட்சமும், மற்ற வீரர்களுக்கு ரூ.6 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் மும்பை இந்தியன்ஸுக்கு படுமோசமானதாக தொடங்கியுள்ளது. 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ஆடிய 5 போட்டிகளிலும் படுமோசமாக தோல்வியடைந்தது.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி மயன்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவானின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 198 ரன்களை குவித்தது. 199 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடித்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் பந்துவீச மும்பை இந்தியன்ஸ் அணி ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இந்த சீசனில் ஏற்கனவே டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. எனவே இது 2வது முறை என்பதால் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.24 லட்சமும், மற்ற வீரர்களுக்கு ரூ.6 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் மீண்டும் ஒருமுறை மும்பை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால், ரோஹித் சர்மாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதுடன், அவருக்கு ஒரு போட்டியில் ஆட தடையும் விதிக்கப்படும். எனவே ரோஹித் சர்மா உஷாராக இருக்க வேண்டும்.