ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மற்ற அணிகள் அனைத்தும் வீரர்களை பரபரப்பாக எடுத்துவந்த நிலையில், கையிருப்பில் ரூ.48 கோடியை வைத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, எந்த வீரரையுமே எடுக்காமல் அமைதி காத்தது.
எவ்வளவு தொகை கொடுத்தேனும் இஷான் கிஷனை எடுப்பதில் உறுதியாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, அவர் மீது ஆர்வம் காட்டியது. சன்ரைசர்ஸ் அணி இஷான் மீது ஆர்வம் காட்டியது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அந்த அணி ஒதுங்கிக்கொள்ள, மும்பை இந்தியன்ஸுடன் ஆர்சிபி போட்டியிட்டது.
ஆர்சிபியும் ஒரு கட்டத்தில் விலக, பஞ்சாப் கிங்ஸ் அணி இஷான் கிஷனை எடுக்க போட்டியிட்டது. ஆனால் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும், இஷான் கிஷனை விட்டுக்கொடுக்க விரும்பாத மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசி வரை போராடி இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு எடுத்தது. இன்றைய ஏலத்தில் இதுதான் உச்சபட்ச தொகை.
இன்றைய ஏலத்தில் முதல் வீரராக இஷான் கிஷனை எடுத்த மும்பை அணி, அவருக்கு பெருந்தொகையை ஒதுக்கிவிட்டது. விக்கெட் கீப்பர் மற்றும் ரோஹித்தின் ஓபனிங் பார்ட்னர் என்ற வகையில் அவருக்கு இந்த தொகையை கொடுத்துள்ளது மும்பை அணி.
