CCL 2024: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் – எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து நடையை கட்டிய சென்னை ரைனோஸ்!

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை ஹீரோஸ் அணிக்கு எதிராக சென்னை ரைனோஸ் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.

Mumbai Heroes beat Chennai Rhinos by 8 Wickets Difference in CCL 2024 Eliminator rsk

ஒவ்வொரு ஆண்டும் நடிகர்களுக்கு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதன் முதலாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டது. இந்த தொடரானது 2011 முதல் 2016 வரையில் டி20 பார்மேட்டில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் டி10 பார்மேட்டாக நடத்தப்பட்டது.

தற்போது 10, 10 ஓவர்களாக 20 ஓவர்கள் கொண்ட டெஸ்ட் போட்டி போன்று நடத்தப்படுகிறது. தற்போது வரையில் 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சென்னை ரைனோஸ் அணியானது 2 முறையும், தெலுகு வாரியர்ஸ் அணியானது 4 முறையும், மும்பை ஹீரோஸ் அணி ஒரு முறையும், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியானது ஒரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன.

கடந்த 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் சிசிஎல் தொடர் நடத்தப்படவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த சிசிஎல் தொடரில் தெலுகு வாரியர்ஸ் சாம்பியனானது. இந்த நிலையில், தான் தற்போது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் 10ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சென்னை ரைனோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், தெலுகு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், போஜ்பூரி தபாங்க்ஸ் மற்றும் பஞ்சாப் டி ஷேர் என்று 8 அணிகள் இடம் பெற்று விளையாடி வந்தன.

இதில், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதே போன்று பஞ்சாப் டி ஷேர், போஜ்பூரி தபாங்ஸ் ஆகிய அணிகள் எலிமினேட் செய்யப்பட்டிருந்தன. சென்னை ரைனோஸ் 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கேரளா ஸ்டிரைக்கர்ஸ் வெளியேறியது.

இந்த நிலையில் தான் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை ஹீரோஸ் மற்றும் சென்னை ரைனோஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை ஹீரோஸ் முதலில் பவுலிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை ரைனோஸ் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் விக்ராந்த் மட்டும் அதிகபட்சமாக 40* ரன்கள் எடுத்தார். சரண் 30 மற்றும் சாந்தனு 29 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து விளையாடிய மும்பை ஹீரோஸ் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. பின்னர், 2 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய சென்னை ரைனோஸ் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில், சாந்தனு மட்டும் அதிகபட்சமாக 24* ரன்கள் எடுக்க சென்னை ரைனோஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், 80 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை ஹீரோஸ் பேட்டிங் செய்தது. இதில், 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்த மும்பை ஹீரோஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக சென்னை ஹீரோஸ் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரிலிருந்து வெளியேறியது.

மும்பை ஹீரோஸ் இன்று நடக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடுகிறது. இதில், பெங்கால் டைகர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நேற்று நடந்த குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்கால் டைகர்ஸ் மற்றும் கர்நாடகா புல்டோர்சர்ஸ் அணிகள் மோதின. இதில், கர்நாடகா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios