Asianet News TamilAsianet News Tamil

பிரித்வி ஷாவின் காட்டடி தொடக்கம்; ஆதித்ய தரேவின் அதிரடி சதம்..! விஜய் ஹசாரே டிராபியை வென்றது மும்பை அணி

பிரித்வி ஷாவின் அதிரடியான தொடக்கம் மற்றும் ஆதித்ய தரேவின் அதிரடி சதத்தால், இறுதி போட்டியில் உத்தர பிரதேச அணி நிர்ணயித்த 313 ரன்கள் என்ற கடின இலக்கை  42வது ஓவரிலேயே அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி, விஜய் ஹசாரே டிராபியை வென்றது. 
 

mumbai beat uttar pradesh in final and wins vijay hazare trophy
Author
Delhi, First Published Mar 14, 2021, 4:57 PM IST

உள்நாட்டு டி20 தொடரான விஜய் ஹசாரே டிராபி இறுதி போட்டியில் மும்பை மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதின. டெல்லியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி முதலில் பேட்டிங் ஆடி 50 ஓவரில் 312 ரன்களை குவித்தது.

உத்தர பிரதேச அணியின் தொடக்க வீரர் மாதவ் கௌசிக் தொடக்கம் முதலே சிறப்பாக அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். அவருடன் தொடக்க வீரராக இறங்கிய சமர்த் சிங் நன்றாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 55 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கரன் ஷர்மா(0), ப்ரியம் கர்க்(21), அக்‌ஷ்தீப் நாத்(55) ஆகியோர் ஆட்டமிழக்க, மாதவ் மட்டும் நிலைத்து ஆடினார்.

அபாரமாக ஆடி சதமடித்த மாதவ் கௌசிக், அதன்பின்னரும் சிறப்பாக ஆடி பெரிய இன்னிங்ஸை ஆடினார். 156 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 158 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று உத்தர பிரதேச அணியை 312 ரன்களை குவிக்கவைத்தார்.

இதையடுத்து 313 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மும்பை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பிரித்வி ஷா, ஆரம்பம் முதலே அடி வெளுத்துவாங்கினார். தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஆக்ரோஷமாக தொடங்கிய பிரித்வி ஷா, வெறும் 39 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து கொடுத்தார். 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 பந்தில் 29 ரன் அடித்து ஆட்டமிழந்தார். ஷாம்ஸ் முலானி 36 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஆதித்ய தரே பொறுப்புடன் ஆடி சதமடித்தார். சதமடித்த தரே, 107 பந்தில் 118 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று மும்பை அணியை வெற்றி பெற செய்தார்.

பிரித்வி ஷா அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தாலும், ஆதித்ய தரேவின் பொறுப்பான சதத்தாலும் 313 ரன்கள் என்ற கடின இலக்கை 42வது ஓவரிலேயே எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி, 4வது முறையாக விஜய் ஹசாரே டிராபியை வென்றது,. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios