உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன.

சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இந்த போட்டியில் சௌமியா சர்க்காருக்கு பதிலாக லிட்டன் தாஸ், தமீம் இக்பாலுடன் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். 

தாஸும் தமீம் இக்பாலும் நிதானமாக தொடங்கினர். ஆனால் லிட்டன் தாஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ரோஹித் சர்மாவை வீழ்த்திய முஜீபுர் ரஹ்மான், அதேபோலவே இந்த போட்டியிலும் முதல் விக்கெட்டாக லிட்டன் தாஸை வீழ்த்தினார். 

அதன்பின்னர் இக்பாலும் ஷகிப் அல் ஹாசனும் சிறப்பாக ஆடினர். நன்றாக தொடங்கிய இக்பால், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறிவிட்டார். 36 ரன்களில் நபியின் சுழலில் போல்டாகி வெளியேறினார். உலக கோப்பை தொடரில் உச்சபட்ச ஃபார்மில் இருந்துவரும் ஷகிப் அல் ஹாசன், இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். ஆனால் 51 ரன்களில் இவரும் முஜீபுர் ரஹ்மானின் சுழலில் அவுட்டாக, இவரை தொடர்ந்து களத்திற்கு வந்த சௌமியா சர்க்காரும் 3 ரன்களில் முஜீபுரிடம் வீழ்ந்தார். 

இதையடுத்து முஷ்ஃபிகுர் ரஹீமும் மஹ்மதுல்லாவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.