உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலக கோப்பைக்கு பின்னும் அவர் மௌனம் காத்ததால், அவரது ஓய்வு குறித்த விவாதம் வலுத்தது. தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும், அவருக்கு அணியில் இடமில்லை என்பதை தேர்வுக்குழு வெளிப்படையாகவே தெரிவித்தது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இடம்பெறுவாரா இல்லையா என்பது ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருந்த நிலையில், ”நீங்க சேர்த்துகிட்டாலும் நான் வரலப்பா” என்கிற ரீதியில், ராணுவ பயிற்சிக்காக போகப்போவதாக கூறி, அணி அறிவிக்கும் முன்னரே தன்னை விடுவித்துக்கொண்டார் தோனி. 

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்க, தோனியோ எல்லைப்பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். பாராசூட் ரெஜிமெண்ட், ரோந்து என தோனி ராணுவ பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

அடுத்ததாக இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடவுள்ளது. தென்னாப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு வந்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணியில் தோனிக்கு இடம் அளிக்கப்படவில்லை. 

2020 அக்டோபரில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது இந்திய அணி நிர்வாகம். ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் என்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அவரது ஆட்டத்தை பொருட்படுத்தாமல் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகிறது. எனவே தோனிக்கு இனிமேல் அணியில் இடமில்லை என்பது உறுதியாகிவிட்டது. அவருக்காக கடைசியில் ஒரு ஃபேர்வெல் மேட்ச் மட்டும் ஏற்பாடு செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அணியில் இனி அவருக்கு இடமில்லை என்பது தெரிந்துவிட்டது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியில் தோனி எடுக்கப்படாதது குறித்து விளக்கமளித்துள்ளார் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். இதுகுறித்து பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், தோனியை ஓரங்கட்டும் பேச்சுக்கே இடமில்லை. 2020 டி20 உலக கோப்பைக்கான அணியை கட்டமைக்க தோனி ஒத்துழைக்கிறார். தோனி ஓய்வு குறித்து அவர் மீது பல விமர்சனங்கள் தூற்றப்படுகிறது. ஆனால் அவற்றை பற்றி கவலைப்படாமல், ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக இன்னும் ஒரு தரமான விக்கெட் கீப்பர் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து தோனி ஓய்வறிவிக்காமல் இருக்கிறார். அதனால் இப்போதைக்கு தோனியை ஓரங்கட்டும் பேச்சுக்கே இடமில்லை என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.